நியூயார்க், நவ.30- பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாளன்று அய்.நா. அவை வெளியிட்ட அறிக்கையில் உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் படுகொலை செய்யப்படுகிறாள் என அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரானவன் முறையை ஒழிப் பதற்கான பன்னாட்டு நாளான நவம்பர் 25 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறையை அகற்ற ஒன்றிணைவோம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் நவம்பர் 25 அன்று தொடங்கிய இந்த நாள் 16 நாள்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகிற பிரச்சாரம் உள்ளிட்ட பல வடிவங்களில் நடைபெற்று பன் னாட்டு மனித உரிமைகள் நாளாக டிசம்பர் 10 அன்று முடி வடையும்.
25.11.2024 அன்று அய்.நா., பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 இல் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 73.6 கோடி பெண்களில் மூன்றில் ஒரு பெண் தங்களது பெற்றோர், கணவர், காதலர் அல்லது குடும்ப உறுப்பினர் மூலமாக உடல் அல்லது பாலியல் ரீதியான அல்லது இரண்டு கொடுமைகளையும் அனுபவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
2020 இல் உலகளவில் கடத்தப்படும் மனிதர்களில் 10 நபர்களில் நான்கு பேர் வயது வந்த பெண்களாகவும், இரண்டு பேர் பதின்பருவ பெண்களாகவும் உள்ளனர். குறிப்பாக பாலியல் சுரண்டலுக்காக கடத்தப்பட்டவர்களில் 90 சதவீதம் பெண்கள் எனவும் தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடு கூட மிகவும் ஆபத்தான இடமாக மாறி விட்டது. கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் தங்களது கணவர், காதலர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 51,100 பெண்கள், சிறுமிகளின் படு கொலைக்குக் கணவர், காதலர் அல்லது உறவினர் காரணமாக இருந்துள்ளனர். இந்த படுகொலைகள் 2022 இல் 48,800 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் வேலை செய்யும் இடங்கள் தொடங்கி சமூக ஊடகங்கள் வரை அவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவிட்டன. காலநிலை மாற்றம், போர்கள் ஆகியவற்றால் பெண்களுக்கு எதிரான வன்முறை முன்பை விட அதிகமாக தீவிரமடைந்துள்ளது என அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவில் 2023 இல் 21,700 பேர் தங்களது கணவர், காதலர் பெற்றோர் உள் ளிட்ட உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்கா மக்கள் தொகையின் அளவோடு ஒப்பிடும்போது பாதிக்கப்பட்ட பெண்களின் சதவீதம் அதிகமாகும். அதாவது ஒரு லட்சம் ஆப்பரிக்க பெண்களில் 2.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஒரு லட்சம் பெண்களில் 1.6 பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். 2024– ஆம் ஆண்டுக்கான பிரச்சாரம், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கொல்ப்படுகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர ஒன்றிணைவோம். எந்த சமரசமும் இல்லை ( #NoExcuse) என்ற முழக்கங்களின்கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள், மாற்றுத் திறனாளி பெண்கள் மற்றும் வயதான பெண்களுக்கு எதிரான வன் முறைகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்க அதிக கவனம் செலுத்து வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.