புதுடில்லி, நவ. 27- நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் குறித்து 2 நாள்கள் விவாதம் நடத்த வலியுறுத்தி, இரு அவைகளின் தலைவா்களுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு நாளையொட்டி, இந்தக் கடிதம் எழுதப்பட்டது.
இதுதொடா்பாக அக்கட்சித் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘நாடாளு மன்றத்தில் அரசமைப்புச் சட்டம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கப்பட வேண்டும். இதன் மூலம், அரசமைப்புச் சட்டம் பற்றிய நல்ல விடயங்கள் குறித்தும், நாட்டில் நடைபெற்று வரும் கெட்ட விடயங்கள் தொடா்பாகவும் விவாதிக்க முடியும்.
இதுகுறித்து மக்களவைத் தலைவா் ஓம் பிர்லாவுக்கு அந்த அவையின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியும், மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு அந்த அவையின் எதிர்க்கட்சித் தலைவரான நானும் கடிதம் எழுதியுள்ளோம்’ என்றார்.
ஏன் விவாதம்?: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கவுரவ் கோகோய் கூறியதாவது: சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாள், சுதந்திரப் போராட்டத்தின்போது நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆம் ஆண்டு போன்ற சந்தா்ப்பங்களில், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றன.
எனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசமைப்புச் சட்டம் குறித்து 2 நாள்கள் விவாதம் நடைபெற வேண்டும். இதன் மூலம், அரசமைப்புச் சட்டம் மீதான தங்களின் ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிகாட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதை நாட்டு மக்கள் அனைவரும் பார்க்க முடியும். இதுகுறித்து பிற எதிர்க்கட்சித் தலைவா்களுடன் காங்கிரஸ் ஆலோசித்துள்ளது’ என்றார்.
தமிழ்நாட்டுக்கு வெறும் 50 கோடி ரூபாய்தான்!
புதுடில்லி, நவ. 27- ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு, பல்வேறு மாநிலங்களுக்கான பேரிடர் தணிவிப்பு மற்றும் திறன் கட்டமைப்பு திட்டங்களுக்காக, ரூ.1,115.67 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், தமிழ்நாட்டிற்கு ரூ.50 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பதவிக்கு மரியாதை தரவேண்டும் சி.வி.சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, நவ. 27- அதிமுக மேனாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், 12 மணி நேர வேலை நேரம் குறித்த தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம், வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்களின்போது தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் ஆகியோரை நேரடியாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சி.வி.சண்முகம் இந்த விவகாரத்தில் தனது மன்னிப்பை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி இடைக்கால தடை விதித்திருந்தது.
மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்சு துலியா மற்றும் அசானுதீன் அமனுல்லா ஆகியோர் அமர்வில் நேற்று (26.11.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஒரு மாநில முதலமைச்சருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் அநாகரிகமாக பேசுவதா?. இந்த செயல்பாட்டால் மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு வழங்கப்பட்ட தடையை ஏன் ரத்து செய்யக் கூடாது? முதலமைச்சரை தரம் தாழ்த்தி பேசும்போது அவதூறு வழக்கு பதியப்படுவது இயல்புதானே, எனவே அந்த வழக்கை சி.வி.சண்முகம் சந்திக்கட்டும்” என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்து, விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.