நியூயார்க்/ புதுடில்லி, நவ.22 சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கவுதம் அதானிக்கு எதி ராக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
அதானி குழும நிறுவனங்களின் தலைவர் கவுதம் அதானி (62), உலக பணக்காரர் பட்டியலில் 17 ஆவது இடத்திலும், இந்திய அளவில் 2 ஆவது இடத்திலும் உள்ளார். இந்த நிலையில், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி (அதானி கிரீன் எனர்ஜி செயல் இயக்குநர்), மேனாள் சிஇஓ வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்காவின் நியூயார்க் நீதி மன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2020–2024 இல் நடந்தது என்ன?
2020-2024 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதி மன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி நிறு வனம் முறைகேடாக பெற்ற இந்த ஒப்பந்தங்கள் மூலம் 20 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.17,000 கோடி) அதிகமான லாபத்தை ஈட்ட முடியும் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அர சின் உயர் அதிகாரிகளை கவுதம் அதானி பலமுறை சந்தித்ததாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 54 பக்க குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
லஞ்சத்தை மறைத்து பெற்ற ரூ.25,000 கோடி முதலீடு
சட்ட விரோதமான லஞ்ச நடவடிக்கைகளை மறைத்து அமெரிக்காவில் அதானி நிறு வனம் 300 கோடி டாலருக்கு (ரூ.25,000 கோடி) முதலீடு பெற்றதாக நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது. டில்லியை தலைமையிடமாகக் கொண்ட அஸுர் பவர் நிறுவனமும் இந்த லஞ்ச வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடன் பத்திரச் சட்டங்கள், விதி களை மீறி செயல்பட்டதற்காக அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியமும் கவுதம் அதானி, சாகர் அதானி, அஸுர் பவர் நிர்வாகிகள் மீது தனியாக குற்றச்சாட்டுப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து, கவுதம் அதானி, சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக அமெ ரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இது பன்னாட்டு சட்ட அமலாக்கத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அமெரிக்க நீதித்துறை வழக்குரைஞர்கள் தெரி வித்துள்ளனர்.
வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள்!
வெளிநாடுகளில் போலி நிறு வனங்களை உருவாக்கி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி நிறுவனம் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஏற்கெனவே தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது. இந்த நிலையில், கவுதம் அதானி மற்றும் அவரது சகாக்கள் மீது லஞ்ச குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது அதானி குழுமத்துக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.