மணிப்பூரில் மே மாதம் துவங்கி இன்றுவரை இனப்படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குக்கி சமூகப் பெண்கள் இருவரை கடந்த மே 4 ஆம் தேதி அன்று ஆடைகளைக் களைந்து பாலியல் வன்கொடுமை செய்து ஆடைகள் இன்றியே அவர்களை இழுத்துச்சென்ற காட்சிப் பதிவு 19.7.2023 அன்று வெளியாகி உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 80 நாள்களாக மணிப்பூர் அவலத்தை வேடிக்கைப் பார்த்த பிரதமர் மோடி குறித்து பெரும் விமர்சனம் எழுந்து வருகிறது. கடந்த மே மாதமே தேசிய மகளிர் உரிமை ஆணையம், ஒன்றிய உள்துறை அமைச்சகம் போன்றவற்றிற்கு பெண்கள் அங்கே பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்படுகிறார்கள் என்று சான்றுகளோடு புகார் அளித்தும் இந்த நிமிடம் வரை அது குறித்து ஒன்றிய பா.ஜ.க. அரசு கள்ள மவுனமே சாதிக்கிறது.
இந்த நிலையில் பா.ஜ.க. உறுப்பினர்கள், பிர முகர்கள் மக்களிடையே முகம் கொடுத்துப் பேச முடியாத அளவிற்கு நெருக்கடியில் உள்ளனர். இதனைத் திசை திருப்ப கோவை சட்டமன்ற உறுப் பினரும், பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவி யாகவும் உள்ள வானதி சீனிவாசன் “புதுக்கோட்டை – வேங்கைவயல் தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவைக் கலந்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? இதுதான் சமூக நீதி அரசா?” என்று திடீர் அறிக்கை விட்டுள்ளார்.
வேங்கைவயல் தொடர்பாக அனைத்து உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு காவல்துறையும், நீதிமன்றமும் செய்து கொண்டுதான் இருக்கின்றன. இரண்டு நாள்களுக்கு முன்புகூட சந்தேக நபர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. வேங்கை வயல் தொடர்பான வழக்கில் நீதிமன்றமே தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கைகள் குறித்துப் பாராட்டி உள்ளது
இப்படி இருக்க பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மணிப்பூர் பிரச்சினையில் இருந்து திசை திருப்பவே 4 மாதங்களுக்கு முன்பு நடந்த வேங்கைவயல் பிரச்சினையை தூக்கிக் கொண்டு வந்துவிட்டார். அவர்களைப் பொறுத்து எப்போதுமே பெரிய கோட்டிற்கு அருகில் மற் றொரு பெரிய கோட்டைப் போடவே முயற்சிப் பார்கள். இதைத்தான் வானதியும் தற்போது செய்துள்ளார்.
ஒரு பெண்ணாக இருந்தும், பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்ட தகவலை அறிந்தும் குருதி கொதித்திருக்க வேண் டாமா? ஆவேசப்பட்டு இருக்க வேண்டாமா?
இது என்ன அரசியல் பிரச்சினையா? மனித குலத்தின் மாண்புக்கே மானக் கேடானது அல்லவா?
மணிப்பூரிலும், ஒன்றிய அளவிலும் பி.ஜே.பி. ஆட்சி நடக்கிறது – இரட்டை என்ஜின் ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் மணிப்பூர் கலவரமும், பாலியல் வன்கொடுமையும் உலகினர் மத்தியில் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ள நிலையில் – “தீயை அணைக்க இலவம் பஞ்சு மூட்டையைப் போர்த்துவதுபோல்” பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவர் குறுக்குச்சால் ஓட்டலாமா? கட்சியை மறந்துவிட்டு – பெண்கள் மானப்பங்கப் படுத்தப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுங்கள் – களத்தில் கூடுங்கள்!