மதுரை, திருமங்கலத்தில் 45ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை அண்மையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் ஒரு மகளிர் கவனத்தை ஈர்த்தார். “தோழர், தேநீர் இன்னும் வரவில்லை?, தோழர் விண்ணப்பப் படிவம் எங்கே இருக் கிறது?, தோழர் பிஸ்கட் வாங்க வேண்டும்”, என அந்த மகளிர் தோழரிடம் பலரும் கேட்க, அவரும் பதில் சொல்லிக் கொண்டே பம்பரமாய் சுற்றி வருகிறார். திடீரென, “தோழர் உங்களுக்குப்
பொன்னாடை அணிவிக்க மேடைக்கு அழைக்கிறார்கள்”, என ஒருவர் வந்து கூறினார்!
இளம் வயது தோழர்தான்! களச் செயல்பாட்டில் தீவிரமாய் இயங்கினார். இயக்க மகளிர் நேர்காணலுக்கு அவரைச் சந்திக்கும் திட்டம் “அப்போது வரை” இல்லை. எனினும் சில செய்திகளைச் “சுடச்சுட” பதிவு செய்ய வேண்டும் என்கிற நோக்கில், அந்த அரங்கத்திலேயே அவரைச் சந்தித்தோம்! மதுரை புறநகர் மாவட்ட மகளிரணி செயலாளராக இருக்கிறார்.
வணக்கம் தோழர்! தங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?
என் பெயர் ச.கலைச்செல்வி. வயது 34. பிறந்த ஊர் மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர். திருமணத்திற்குப் பிறகு வசிப்பது திருமங்கலம். 7ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். பெற்றோர் பெயர் இராஜாங்கம் – கலாதேவி. எங்கள் அப்பா ஓரளவு சமூகச் சிந்தனையுடன் இருந்தவர். எனக்குக் காது குத்து விழா நடத்தினார். அதேநேரம் அழைப்பிதழில் பெரியார், அம்பேத்கர், கலைஞர் படம் போட்டு அடித்தார்.
பெரியார் கொள்கை உங்களுக்கு எப்போது அறிமுகம் ஆனது?
அது ஒரு சுவையான கதை. எங்கள் ஊரில் பெண்கள் கூட்டம், கூட்டமாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் செல்வார்கள். ரூபாய் 10 ஆயிரம் கட்டினால் போதும், மேல்மருவத்தூர் மட்டுமின்றி பல ஊர்களுக்கும் அழைத்துச் செல்வார்கள். கேட்கும் போதே “சுற்றுலா போகலாமா?”, என்றுதான் கேட்பார்கள். காரணம் பெண்கள் வெளியில் அதிகம் செல்வதில்லை. அதிலும் தனியாகப் போகும் வாய்ப்புகளும் குறைவு. எனவே இதைக் காரணமாகக் கொண்டு ஆன்மீகச் சுற்றுலா என்கிற பெயரில் 6 மாதத்திற்கு ஒருமுறை கிளம்பி விடுவார்கள்.
நீங்களும் அடிக்கடி ஆன்மீகச் சுற்றுலா போய் வந்துள்ளீர்கள்?
ஆமாம் தோழர்! பக்தி இருந்ததோ இல்லையோ ‘பரவசம்’ இருந்தது. அதாவது “ஜாலி” என்கிற பெயரில் ஒரு மகிழ்ச்சி கிடைத்தது. கையில் பணம் இருக்காது; கடன் வாங்கியாவது செல்வோம். எனக்கு 2007 இல் திருமணம் நடைபெற்றது. இணையர் பெயர் சந்திரன். அவர்தான் கடன் வாங்கிக் காசு கொடுப்பார். எங்களுக்கு நிஷாந்தினி (11) என்கிற மகளும், மருதுபாண்டி (9) என்கிற மகனும் உள்ளனர். அவர்களையும் சேர்த்து அழைத்துச் செல்வேன். மேல்மருவத்தூருக்கு மாலை போட்டு இதுவரை 9 ஆண்டுகள் சென்றுள்ளேன்.
சரி… ஆன்மீகச் சுற்றுலா எப்போதுதான் முடிவுக்கு வந்தது?
எங்கள் பகுதியில் முத்துக்கருப்பன் என்கிற தோழர் எனக்கு அறிமுகமானார். அவர் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிகிறார். மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராக அவரும், தலைவராக எரிமலை அய்யாவும் இருக்கிறார்கள். இந்நிலையில், “கடன் வாங்கி கடவுளைத் தரிசிக்க வேண்டுமா?” என அவர் கேட்டார். நான் இதுபோன்ற பகுத் தறிவுக் கேள்விகளை எதிர்கொண்டதே இல்லை. ஆத்தி கத்தில் தொடர்ந்தாலும், நாத்திகத்திலும் என் சிந்தனைத் திசை திருப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாய் 2019ஆம் ஆண்டு என் முதல் இயக்கக் கூட்டம் சோழவந்தான் பகுதியில் தொடங்கியது. வரவேற்றுப் பேசிய தோழர் ஒருவர், ஒலிபெருக்கியில் என் பெயரைக் கூறினார். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை! நம் பெயரை எல்லோருக்கும் முன் கூறிவிட்டார்களே எனப் பெருமிதம் கொண்டேன். அன்று முதல் என் “பகுத்தறிவுச் சுற்றுலா” நாத்திக வாழ்க்கையில் தொடங்கிவிட்டது.
மகிழ்ச்சி! உங்கள் முதல் பகுத்தறிவுப் பயணம் எங்கு அமைந்தது?
2022 ஜுலை 30ஆம் தேதி, அரியலூரில் நடைபெற்ற இளைஞரணி மாநாடுதான் எனது முதல் ‘விடியல்’ பயணம். அதற்கு முன்னால் சிறு, சிறு கூட்டங்களில் கலந்துள்ளேன். கலந்துரையாடல் கூட்டங்களில் 15, 20 பேர் மட்டுமே இருக் கிறார்களே எனத் தோழர்களிடம் கேட்டுள்ளேன். அவர்க ளும் விரிவாகப் பதில் அளித்துள்ளனர். “நீங்கள் ஒரே ஒருவர் வந்தாலும் கூட்டங்கள் நடைபெறும் என்ற போது தான், எண் ணிக்கை முக்கியமில்லை; கொள்கையே பெரிது” என்பதை உணர்ந்தேன்.
இந்நிலையில் அரியலூர் மாநாடு என்னை ஆச்சரியத்தின் எல்லைக்கே இட்டுச் சென்றது. “கடவுள் இல்லை என்ப வர்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்களா?” என ஆடிப் போய் விட்டேன். பேரணியில் நாங்கள் 27ஆவது மாவட்டமாக நின்றோம். அப்படியென்றால் முன்னும், பின்னும் எவ்வளவு பேர் நிற்பார்கள், மலைத்துப் போனேன். பேருந்து, சீருந்து, மகிழுந்து என வாகன வரிசைகளும் அணிவகுத்து நின்றன.
அதேபோல கடவுள் இல்லை என்று சொல்லி கார் இழுத்தல், மாரியாத்தா எங்கே எனக் கேட்டு அரிவாள் மீது ஏறுதல், காளியாத்தா எங்கே எனக்
கேட்டு தீச்சட்டி ஏந்துதல் எனப் பலவற்றையும் பார்த்து, இவையெல்லாம் ஆன்மீகத்தில் தானே செய்வார்கள், இங்கே எப்படி என வியந்து போனேன்; விழிப்புணர்வும் பெற்றேன்!
அப்போதுதான் நான் ஒன்றை உணர்ந்தேன். எந்த ஒரு விடயத்திலும் முதலில் நாம் “தெளிவு” பெற வேண்டும். பிறகே மற்றவர்களிடம் எடுத்துச் சொல்ல முடியும். நான் படிக்கிற காலத்தில் என்னைப் பார்த்து சக நண்பர்கள்,”உன்னை ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது”, என்பார்கள். இப்போது நினைக்கிறேன், நான் முன்பே பெரியார் கொள்கைக்கு வந்திருக்க வேண்டும், நிறைய தெரிந்திருக்கலாம்!
இப்போதும் பிழையில்லை,
இளம்வயது தானே, காலம் இருக்கிறது?
ஆமாம்! அதனால் பேச்சைவிட செயல் பெரிது எனக் களத்தில் பணி செய்ய விரும்புகிறேன். எனக்கு நிறைய பேச வேண்டும், எழுத வேண்டும் என்கிற ஆசையெல்லாம் இருக்கிறது. அதற்குச் சற்றுக் கூச்சமும் இருக்கிறது. எனினும் இப்போது அது நீங்கி வருகிறது. இன்றைய பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை மதுரை புறநகர் மாவட்டம் எடுத்து நடத்துகிறது. எங்கள் வீட்டில் நடக்கும் விழா போல உணர்கிறேன். மகன், மகளுடன் வந்திருக்கிறேன். எனது பொறுப்பில் 13 மாணவர்களையும் அழைத்து வந்துள்ளேன்.
நிகழ்விற்கு முன்பே பணிகள் தொடங்கி, இன்றைய தினம் விண்ணப்பம் பூர்த்தி செய்வது, தேநீர் கொடுப்பது, உணவு ஏற்பாடு என ஒவ்வொன்றிலும் தோழர்களுக்கு உதவி செய்கிறேன். ஆத்திகக் கலைச்செல்வி வீட்டிற்குள்ளேயே இருந்தார். நாத்திகக் கலைச்செல்வி வெளியில் வருகிறார். நம்மால் முடிந்தளவு இந்தச் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும்; இன்னும் நிறைய செய்ய வேண்டும்!
வேறு எந்தெந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளீர்கள்?
மூன்று ஆண்டுகளாகக் குழந்தைகளுடன் குற்றாலம் பயிற்சி முகாம் சென்று வருகிறேன். அங்கும் 5 மாணவர் களை என் பொறுப்பில் அழைத்துப் போகிறேன். தவிர ஹிந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், நீட் ஒழிப்புப் போராட்டம் ஆகியவற்றிலும் கலந்து கொண்டுள்ளேன். மதுரையில் நடைபெறும் நிகழ்வுகளில் பெரும்பாலும் பங்கேற்றுவிடுவேன். யானைமலை ஒத்தக்கடை அருகேயுள்ள காயம்பட்டியில் பாக்கியலட்சுமி என்கிற தோழரை அரியலூர் மாநாட்டில் சந்தித்தேன். அவருக்கும், எனக்கும் ஒரே மாதிரியான சிந்தனைகள். அவரும் மதுரையில் ஒரு நிகழ்வையும் விடமாட்டார். நாங்கள் இருவரும் எப்போதும் நெருங்கிய கொள்கைத் தோழர்கள்!
“களச் செயல்பாடுகள்” என்கிறபோது
எதிர்ப்புகள் அதிகம் இருக்குமே?
யார் தோழர் எதிர்க்கப் போறாங்க? சில கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும், நாம் மக்களுக்காகத் தானே உழைக்கிறோம். இது மக்களுக்கும் நன்றாகத் தெரியும். எனவே எதிர்ப்புகள் பெரிதாக இருந்ததில்லை. கூட்டங்களில் கலந்து கொள்வது ஒருவகை; களப்பணி செய்வது இன்னொரு வகை. நான் இரண்டாவதில் ஈடுபாடு காட்டுகிறேன். திருமங்கலம் பேருந்து நிலையத்தில், 7 ஆண்டுகளாகப் பூக்கடை வைத்திருக்கிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும்போது என் அத்தை கடையைப் பார்த்துக் கொள்வார்கள். எனது மாமா பொதுவுடைமை இயக்கத்திலும், இணையர் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இருக்கிறார்கள். எனவே நான் திராவிடர் கழகத்தில் இயங்குவதில் தடையேதும் இல்லை.
பெரியார் கொள்கையில் நான் துணிச்சல் பெறுகிறேன்; தன்னம்பிக்கை அடைகிறேன்! பெயர், புகழை விட, மரியாதை என்பது மிக, முக்கியம். அதுவும் ஒரு பெண்ணாக அனுபவித்து உணர்கிறேன். உறவினர்களின் இல்ல விழாவில் இடம்பெறும் பெயரைவிட, இயக்கத்தின் துண்டறிக்கைகளில் இடம்பெறும் பெயருக்கு வலிமை அதிகம்!
வலிமையை உணர்ந்த தருணங்கள் எதுவும் இருக்கிறதா?
எங்கள் திருமங்கலம் பகுதியில் ஒருநாள் சென்று கொண்டிருந்தேன். முதல் நாள் இரவுதான் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளுக்கு (2023) தோழர்கள் சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள். அடுத்த நாள் காலையில், அதன்மீது ஒரு நகைக்கடை திறப்பு விழா சுவரொட்டியை கட்டிவிட்டார்கள்.
எனக்கு வேகமும், கோபமும் ஒரு சேர வந்துவிட்டது. உடனே நகைக்கடைக்குச் சென்றேன். எப்படி நீங்கள் சுவரொட்டி ஒட்டலாம் எனக் கேட்டு சிறிய கலகமே செய்து விட்டேன். உடனே தோழர்களுக்கு போன் செய்து விவரம் கூறினேன். கடை உரிமையாளர் கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்புக் கேட்டார். இது சுவரொட்டி ஒட்டியவர்களின் தவறு, இனி அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னதும் தான் திரும்பி வந்தேன்.
ஆசிரியர் கி.வீரமணி அய்யாவைச் சந்தித்து இருக்கிறீர்களா?
ஆசிரியர் நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் சென்றுவிடுவேன். நான் கொள்கைக்கு வருவதற்கு முன்னால், எனது அத்தை எனக்கு மொட்டை அடிப்பதாக ஒரு நேர்த்திக்கடன் வைத்தி ருந்தார். நான் எவ்வளவோ மறுத்தும் கேட்கவில்லை. பிறகு மொட்டை அடித்துவிட்டார்கள். இந்நிலையில் இயக்கத்திற்கும் வந்துவிட்டேன். இந்நிலையில் அரியலூர் மாநாட்டில் கொடுத்த இளைஞரணி தொப்பியை அணிந்து கொண்டு, அனைத்து இடத்திற்கும் செல்வேன்.
இந்நிலையில் சிறிது, சிறிதாக முடி வளர்ந்து “பாப் கட்டிங்” வெட்டியது போல அழகாக மாறிவிட்டது. ஒரு நிகழ்ச்சியில் இதைப் பார்த்த ஆசிரியர், “பாப் கட்டிங் நன்றாக இருக்கிறது. இப்படித்தான் முடியை வெட்டிக் கொள்ள வேண்டும்” என்று கூறியதும் எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை. உடனே எனது இணையரிடம் கூறினேன். அவருக்கும் மகிழ்ச்சி. அன்றிலிருந்து ‘பாப் கட்டிங்’ போலவே நான் முடிவெட்டிக் கொள்கிறேன்! ஆசிரியர் அவர்கள் ஒரு மேடையில் எனக்குப் பொன்னாடை அணிவித்து, அந்தப் படம் விடுதலையிலும் வந்துவிட்டது. எங்கள் உறவினர்கள் அனைவரும் வியந்து போனார்கள்.
அதேபோல “பெரியார்” திரைப்படம் என்னை உணர்வு பூர்வமாகத் தாக்கிவிட்டது. அவர் எப்படி வாழ்ந்திருக்கிறார், எப்படி செயல்பட்டுள்ளார், நம்மைத் திருத்த எவ்வளவு துன்பங்களை அனுபவித்துள்ளார் என்பதை அப்படத்தின் வாயிலாக அறிந்து கொண்டேன்”, எனத் தம் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார் கலைச்செல்வி. மதுரையில் இதுவரை 3 மகளிரை நேர்காணல் செய்துள்ளோம். மதுரை மாநகரில் ஒரு ராக்கு தங்கம், மதுரை நுழைவாயிலில் ஒரு பாக்யலட்சுமி, மதுரை புறநகருக்கு ஒரு கலைச்செல்வி என மும்மூர்த்திகள் என்று சொல்லுமளவு கொள்கை வீரர்களாக இருக்கிறார்கள்!