சென்னை, நவ.15- சென்னையில் இரு இடங்களில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிலத்தில், ஏழை மக்களுக்காக, 1,476 வீடுகள், சி.எம்.டி.ஏ., நிதியில் கட்டப்பட உள்ளதாக, அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னையில் சி.எம்.டி.ஏ., சார்பில், ‘வடசென்னை வளர்ச்சி திட்டம்’ என்ற தலைப்பில், பல்வேறு கட்டமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்கள் குறித்தும், நேற்றுமுன்தினம் (13.11.2024) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து சி.எம்.டி.ஏ., தலைவரும், அமைச்சரு மான பி.கே.சேகர்பாபு கூறியதாவது:
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்டான்லி மருத்துவமனை அருகில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான, 3.16 ஏக்கர் நிலத்தில், 143 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 776 வீடுகள் கட்டப்பட உள்ளன.
இந்த குடியிருப்பு அனைத்து நவீன வசதிகளுடன், ஒன்பது மாடிகளாக அமைய உள்ளது. இதேபோன்று வால்டாக்ஸ் சாலை தண்ணீர் தொட்டி பகுதியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், 1.57 ஏக்கர் நிலத்தில், 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 700 வீடுகள் கட்டப்பட உள்ளன.
இங்கு, 9 மாடிகள் கொண்ட அடுக்குமாடி வளாகமாக இந்த குடியிருப்பு கட்டப்படும். இதற்கான கட்டுமானப் பணிகள், இம்மாதம் துவங்கப்பட்டு, 2025 டிசம்பருக்குள் முடிக்கப்படும்.
கொளத்துாரில், 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 20 ஏக்கர் நிலத்தில், வண்ண மீன்கள் விற்பனை வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளை விரிவாக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
சென்னையில், 74 ஆண்டுகள் பழைமையான பிராட்வே பேருந்து நிலையத்தை, அடுக்குமாடி வளாகமாக புதுப்பிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மொத்தம், 9 மாடி வளாகமாக கட்டப்படும் இந்த கட்டடத்தில், தரைதளம் மற்றும் இரண்டு தளங்கள் பேருந்து நிறுத்தத்திற்கு பயன்படுத்தப்படும்.
மீதம் உள்ள தளங்கள் வாகன நிறுத்தம் மற்றும் வணிக வளாகமாக மாற்றப்படும். இதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கப்படும்.
-இவ்வாறு அவர் கூறினார்.