சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈ.வெ. இராமசாமி அவர்களுக்கு
‘பெரியார்’ என்ற பட்டம் அளிக்கப்பட்ட நாள் [நவம்பர் 13,1938]
பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் பெண்கள் உரிமைகள் குறித்து மிக விரிவாகப் பேசியது. மதம் எவ்வாறு பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகிறது, மதச் சடங்குகள் ஏன் பெண் மீது வலிந்து திணிக்கப்படுகின்றன, ஜாதியின் கூறுகளும் அதில் எவ்வாறு சேர்ந்தே பங்களிக்கின்றன என்பதையெல்லாம் 1929-இல் செங்கல்பட்டில் நடத்தப்பட்ட இயக்கத்தின் முதல் மாநாடு விளக்கியதுடன், அவற்றை எதிர்த்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பெண்களுக்குச் சமமான சொத்துரிமை அளிக்க வேண்டும் என்பது அதில் முக்கியமான தீர்மானம்.
பெண்களுக்கே முன்னிலை: அனைத்து மாநாடுகளிலும் பெண்கள் பங்கெடுக்க வேண்டும் என்பதை தந்தை பெரியார் முதன்மைப்படுத்தினார். அதனால்தான் தொண்டர்கள் குடும்பமாக வந்து பங்கெடுக்க வேண்டுமென்பதை அவர் வலியுறுத்தினார். மாநாட்டின் தொடக்க உரைகளைப் பெண்களே நிகழ்த்த வேண்டும் என்ற நடைமுறையையும் அவர் வழக்கமாக்கினார். சுயமரியாதை இயக்க மாநாடு களில் பெண்கள் பங்கெடுப்பதும் தொடக்க உரை நிகழ்த்து வதும் வெற்றுச் சம்பிரதாயமாக மட்டும் நின்றுவிடாமல், தொடர் நிகழ்வுகளாகவும் அவை மாறின.
சுயமரியாதை இயக்கத்தின் வழியாகப் பெண்களிடையே ஏற்பட்ட இந்தத் தன்னெழுச்சி பற்றி தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அறியப்பட்ட சிங்காரவேலர் குறிப்பிடும் கீழ்க்கண்ட வாசகங்கள் கவனத்துக்குரியவை:
“சமையலறைக்குள்ளே மட்டும் முடக்கப்பட்ட பெண்கள் இன்று மேடையேறிப் பேசுகிறார்கள், பொதுமக்கள் பிரச்சினை பற்றி விவாதிக்கிறார்கள். ஆண்களோடு சரிநிகர் சமமாக நின்று சமூகத் தொண் டாற்றுகிறார்கள். இதற்கான பெருமைகள் எல்லாம் பெரியாருக்குத்தான் சேரும், இந்த இயக்கத்தில் இருப்பதுபோல் பேச்சாற்றல் மிக்க பெண்களை வேறு இயக்கங்களில் பார்ப்பது மிகவும் அபூர்வம்.”
1937-ல் சென்னை மாகாணப் பிரதம அமைச்சர் ராஜாஜி, இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுப்பெற்றது. 1938-ல் உச்ச நிலையை எட்டியது. பெண்கள் பலரும் அதில் கலந்துகொண்டு குழந்தைகளுடன் சிறை சென்றார்கள்.
தினந்தோறும் போராட்டமும் கைதுமாகத் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்துதான் தருமாம்பாள், மீனாம்பாள் சிவராஜ், நாராயணி அம்மாள் போன்ற பெண்கள் அவருக்குப் ‘பெரியார்’ என்று பட்டம் சூட்ட முடிவெடுத்தனர்.
1938 நவம்பர் 13 சென்னை ஒற்றைவாடைத் திரை யரங்கத்தில் இந்தி எதிர்ப்புப் பெண்கள் மாநாடு நடை பெற்றது
மாநாட்டை மீனாம்பாள் சிவராஜ் கொடியேற்றித் தொடங்கி வைக்க, நீலாம்பிகை அம்மையார் தலைமை உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் தனக்கு வழங்கப்பட்ட ‘பெரியார்’ என்கிற பட்டத்தை மகிழ்வுடன் பெரியார் ஏற்றுக்கொண்டார். 20.11. 1938 தேதியிட்ட ‘குடிஅரசு’ இதழில் ‘தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு’ என்று தலைப்பிட்டு முகப்புச் செய்தியாகவும் இது வெளியிடப்பட்டுள்ளது.
அம் மாநாட்டைமீனாம்பாள், பண்டித நாராயணி, வா. பா. தாமரைக் கண்ணி, பா. நீலாம்பிகை, மூவலூர் இராமாமிர்தம், மருத்துவர் தருமாம்பாள், ராணி அண்ணா உட்பட்ட பெண்கள் குழு முன்னின்று நடத்தியது. அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பொன்னெழுத்தால் பொறிக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்றுதான் ‘பெரியார்’
1. இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன பணிகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறது.
2. மணவினை காலத்தில் புரோகிதர்களையும் வீண் ஆடம்பரச் செலவுகளையும் விலக்கிவிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
3. மற்ற நாடுகளைப்போல் தமிழர்கள் ஒன்றுபட்டு ஒரு சமுகமாய் வாழ்வதற்கு இன்று பெருந்தடையாயிருப்பது ஜாதி வேற்றுமையாதலால், ஜாதி வேற்றுமைகளை ஒழிப்பதற்கு இன்றியமையாத கலப்பு மணத்தை இம்மாநாடு ஆதரிக்கின்றது.
4. தமிழ் மாகாணத்தில் எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று அர சாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக்கொள்வதுடன், பிறமொழிகள் தமிழ் மொழிக்கு விரோதமாகப் பள்ளி களின் கட்டாயப் பாடமாக வைக்கக்கூடாதெனத் தீர்மானிக்கிறது.
5. சென்னையில் முதலாவது மாகாண நீதிபதியாக விருக்கும் தோழர் அபாஸ் அலி அவர்கள், காலஞ்சென்ற பா.வே.மாணிக்க நாயக்கரவர்கட்குத் தமிழ் தெரியாது; அவர் தெலுங்கர் என்று கூறியதையும், நாடார் சமுகத்தைக் கேவலமான வார்த்தைகளால் கூறியதையும், தோழர் மு.இராகவையங்கார், தொல்காப்பியம் 2000 ஆண்டுகட்கு முற்பட்டது என்று கூறியதை மறுத்து 50 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று கூறியதைக் கண்டிப்பதுடன், தமிழறிவும் நூலறிவும் இல்லாத ஒரு நீதிபதி தன்னளவுக்கு மீறிக் கோர்ட்டில் பேசி வருவதை அரசாங்கத்தாரும், ஹைக்கோர்ட்டாரும் கவனித்து ஆவன செய்யும்படி இம்மாநாடு தீர்மானிக்கிறது.