தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிக்கை
புதுடில்லி, நவ.12- உத்தரப் பிரதேசத்தில் கன்வர் யாத்திரை பாதை அமைப்பதற்காக 17,000த்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கங்கை நதிக்கரையையொட்டிய வழி பாட்டிடங்களுக்கு நடைப்பயணமாக சென்று கலசங்களில் ‘புனித’ நீரை எடுத்து வந்து, தங்கள் ஊர்களில் உள்ள கோவில்களில் சிவனுக்கு வழிபாடு செய்கிறார்களாம். இந்த கன்வர் யாத்திரை பாதையில் உள்ள உணவகங்களில் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பெயர்களை எழுதி வைக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு ஏற்கெனவே உத்தர விட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பிட்ட மதத்தவர் பணிபுரியும் கடைகளை தவிர்ப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக குற்றச் சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கன்வர் யாத்திரை பாதைக்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட புகார் தொடர்பான வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.
காஜியாபாத்தில் உள்ள முராத்நகர் மற்றும் முசாபர்நகரில் உள்ள புர்காஜி இடையேயான வழித்தடத்திற்காக காஜியாபாத், மீரட், முசாபர்நகர் ஆகிய 3 வனக் கோட்டங்களில் பாது காக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்த மரங்கள் அழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
தீர்ப்பாயம் அமைத்த உண்மை கண்டறியும் குழு அளித்த இடைக்கால அறிக்கையில்,
3 மாவட்டங்களிலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை 17,607 மரங்கள் வெட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ,12,722 மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பின்னர் 33,776 மரங்களை மட்டுமே வெட்ட முடிவு செய்யப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ள தீர்ப்பாயம், வெட்ட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை மாநிலத்தின் மரங்கள் பாதுகாப்புச் சட்டத்திற்கு உட்பட்டு கணக்கிடப்பட்டதா என தெளிவுபடுத்துமாறு உத்தரவிட்டது. சுற்றுசூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் 2 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.