மும்பை,நவ.11 ஜாதிவாரி கணக்கெடுப்பு,சிறுமிகளுக்கு இலவச கருப்பைவாய் புற்று நோய் தடுப்பூசி, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இரு நாள்கள் விருப்ப விடுமுறை உள்ளிட்ட வாக் குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கையை காங்கிரஸ்-சிவசேனை (உத்தவ்)- தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) உள்ளிட்ட கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி நேற்று (10.11.2024) வெளியிட்டது.
மேலும், பெண்களுக்கு உதவித் தொகையாக தற்போது மாதம் ரூ.1,500 வழங்கப்பட்டு வரும் நிலையில் அதை உயா்த்தி ரூ.3,000-ஆக வழங்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மகாராட்டிரத்தில் வரும் 20-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடை பெறவுள்ள நிலையில் தோ்தல் அறிக்கையை காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவா் சுப்ரியா சுலே மற்றும் சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் ஆகியோர் உடனிருந்தனா். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு: தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கென தனி அமைச்சகம் அமைக்கப்படும். பொருளாதார ரீதியாக பெண்களை மேம்படுத்தும் நோக்கில் சுய உதவிக் குழுக்களுக்கென தனித் துறை உருவாக்கப்படும். ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் தலா ரூ.500 என்ற விலை யில் பெண்களுக்கு விநியோ கிக்கப்படும்.
9 வயதுமுதல் 16 வயது வரையிலான சிறுமிகளுக்கு இலவச கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இரு நாள்கள் விருப்ப விடுமுறை வழங்கப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். 18 வயதினருக்கு ரூ.1 லட்சம்: 18 வயதை எட்டியவுடன் பெண் குழந்தைகள் ஒவ்வொருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். இளைஞா்களின் நலனில் கவனம் செலுத்த இளைஞா் ஆணையம் அமைக்கப்படும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 2.5 லட்சம் பணிகள் நிரப்பப்படும். வேலையில்லாமல் உள்ள டிப்ளமோ மற்றும் பட்டதாரி இளைஞா்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்.
300 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகா்வோருக்கு 100 யூனிட்டுகள் தள்ளுபடி செய்யப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தோ்தல் அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: மகாராட்டிரத்தில் ஆளும் பாஜக-சிவசேனை (ஷிண் டே)- தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவார்) கூட்டணி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.52,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதி முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. வாக்காளா்களை கவரும் வகையிலான வாக்குறுதிகளை வெளி யிட்டு விட்டு அதை ஆளும் கூட்டணி நிறைவேற்ற வில்லை. ஆனால் நாங்கள் அறிவித்துள்ள வாக்குறுதிகள் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டது என்றார்.