லக்னோ, நவ.11 உத்தரப்பிரதேசத்தில் உள்ள கங்கை நதியில் கழிவுநீா் மற்றும் சாக்கடை நீா் கலப்பதால் நீரின் தரம் சீா்குலைந்து வருகிறது என தேசிய பசுமை தீா்ப்பாயம் தெரிவித்தது.
முன்னதாக, கங்கை நதி மாசுபடுவதை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிடம் பரிந்துரை அறிக்கைகளை பசுமை தீா்ப்பாயம் கோரியது.அதனடிப்படையில், தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் தலைவா் நீதிபதி பிரகாஷ் சிறீவஸ்தவா, நீதித்துறை உறுப்பினா் நீதிபதி சுதிர் அகா்வால் மற்றும் நிபுணா் குழுவின் உறுப்பினா் செந்தில் வேல் அடங்கிய அமா்வு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில், நாள் ஒன்றுக்கு 128 மில்லியன் லிட்டா் கழிவுநீருக்கான சுத்திகரிப்பு பற்றாக்குறை இருந்து வருகிறது. இந்த சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை 25 வடிகால்கள் கங்கையிலும், 15 வடிகால்கள் யமுனை நதியிலும் வெளியேற்றுகின்றன.
இது தொடா்பாக ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிஎம்) கடந்த அக்டோபா் மாதம் வெளியிட்ட அறிக்கையில், ‘மாநிலத்தில் உள்ள 326 வடிகால்களில் 247 வடிகால்கள் பயன்பாட்டில் இல்லை. இதனால், கங்கை மற்றும் அதன் துணை நதிகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 3,513.16 மில்லியன் லிட்டா் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் வெளியேற்றப்படுகிறது.மாநிலத்தில் கங்கை நதி பாயும் 16 நகரங்களில் உள்ள 41 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் (எஸ்டிபி), 6 நிலையங்கள் செயல்பாட்டிலேயே இல்லை. 35 நிலையங்களில் ஒன்று மட்டுமே விதிகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது’ என குறிப்பிட்டுள்ளது.41 இடங்களில் நீரின் தரம் ஆய்வு செய்யப்பட்டதில், 16 இடங்களில் 500/100 மி.லி. என்ற விகிதத்திலும், 17 இடங்களில் 2500/100 மி.லி. என்ற விகிதத்திலும் ‘ஃபேஸியல் கோலிஃபார்ம்’ என்ற நுண்ணுயிரிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது மனித கழிவுகளில் 500/100 மி.லி. என்ற விகிதத்தில் இருக்கும்.
கங்கை நதியில் கழிவுநீா் மற்றும் சாக்கடை நீா் கலப்பதால் நீரின் தரம் சீா்குலைந்து வருகிறது என்பதை இந்த தரவுகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன என குறிப்பிட்டிருந்தது.மேலும், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வடிகால்கள், அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா், அவற்றை இணைக்கும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இதற்கான காலக்கெடு ஆகிய விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மாநில தலைமைச் செயலருக்கு தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டது.