சென்னை, நவ.10 தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை கூடுதல் ஆணையர் தேவபார்த்தசாரதி கூறியதாவது:
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகம், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதில் சில முக்கிய திருத்தங்களை அமல்படுத்தி உள்ளது. அதன்படி, மொத்தவியாபாரிகள், விநியோகஸ்தர்கள், சில்லறை வியாபாரிகள், போக்குவரத்தாளர்கள், இருப்புக் கிடங்குகள், இறக்குமதியாளர்கள், உணவுப் பொருட்களை மட்டும் விற்பனை செய்யும் இதர வியாபாரிகள், பெட்டிக் கடைகள் உள்ளிட்டோர் உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற, தட்கல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தவுடன், ஓராண்டுக்கான அனுமதி வழங்கப்படும். பின், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் ஆய்வு நடத்தி, நிரந்தர சான்றுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதொடர்பாக கூடுதல் விபரங்களை, https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், தெருவில் நடந்து அல்லது தள்ளுவண்டிகளில் உணவு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு பதிவு சான்றிதழ் கட்டணமாக 100 ரூபாய்பெறப்பட்டு வருகிறது. தற்போது,அவர்களுக்கு பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், முழுமையான இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அவ்வாறு விலக்கு அளிக்கப்பட்டால், கட்டணமின்றி பதிவுச் சான்று வழங்கப்படும். உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இல்லாமலோ, காலாவதியான உரிமத்துடனோ உணவு வணிகம் செய்வது தண்டனைக்குரியது. அவ்வாறு வணிகம் செய்வோருக்கு, ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஒரே நாளில்
2,153 காவல்துறையினர் பணியிட மாற்றம்
சென்னை, நவ.10 தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,153 காவல்துறையினரை பணியிடமாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை காவல் துறை தலைமை இயக்கு நர் அலுவலகத்தில் வாரந்தோறும் காவலர் குறைத்தீர்க்கும் முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில், கலந்து கொள்ளும் காவலர்கள் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலிடம் மாவட்டம் விட்டு மாவட்டமும், மாநகரம் விட்டு மாநகரமும் பணியிட மாற்றம் கோரி மனு அளித்தனர். இதேபோல், காவல்துறை தலைமை இயக்குநர்சங்கர் ஜிவால் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆய்வு செல்லும் போதும் காவலர்கள் பலர் மனு அளித்தனர்.
இந்நிலையில், காவல்துறை தலைமை இயக்குநரிடம் காவலர்கள் அளித்துள்ள மனுக்களில், தகுதியுடைவர்களை கண்டறிந்து, தமிழ்நாடு முழுவதும் காவலர்கள், முதல் நிலைக் காவலர்கள், தலைமை காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகிய நிலைகளில் பணிபுரியும் 2,153 பேரை பணியிட மாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நேற்று (9.11.2024) உத்தரவிட்டார். இதில் காவல்துறையின் சிறப்பு பிரிவில் பணியாற்றுபவர்கள், நிர்வாக ரீதியாக ஏற்கெனவே கடந்த ஓராண்டுக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள், புகாரில் சிக்கி பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள், விளையாட்டுப் போட்டிகளுக்காக பணிபுரிபவர்கள் ஆகியோர் இந்த பணியிட மாற்ற பட்டியலில் இருந்தால் அவர்களை ஏற்கெனவே பணிபுரியும் இடத்தில் இருந்து விடுவிக்க வேண்டாம் என்றும், அவர்கள் குறித்த தகவல்களை அந்தந்த மாவட்ட மற்றும்மாநகர காவல்துறை அலுவலகங்கள், காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மீதமுள்ள அனைவரும் உடனடியாக ஏற்கெனவே பணிபுரியும் இடத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு, புதிய பணியிடத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் சங்கர் ஜிவால் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள், ஓரிரு நாட்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.