ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, நவ.9- பொது இடங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்துவதற்கான சிறப்பு வசதிகளை கட்டாயமாக் கும் விதிமுறைகளை 3 மாதங் களுக்குள் ஒன்றிய அரசு அமல் படுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுநல மனு
கடந்த 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், பொது இடங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்துவதற்கான வசதிகளை உருவாக்க வேண் டும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்துவதில் தாமதம் செய்யப்படுவதாக, ராஜீவ் ரத்தூர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய் தார். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அர்த்தமுள்ள வசதிகளை உருவாக்க உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்தி வாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
3 மாதங்களில் அமல்
நேற்று (8.11.2024) இவ்வழக்கில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். நீதிபதிகள் கூறியதாவது:-
மாற்றுத்திறனாளிகள் உரிமை கள் சட்டத்தின் விதிமுறைகளில் அவர்களுக்கான வசதிகள் கட்டாய மாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்படவில்லை. வழிகாட்டு நெறிமுறைகள் மூலமாக சுய ஒழுங்குமுறையில் நிறைவேற்றப்படுவதையே அது சார்ந்துள்ளது. எனவே, பொது இடங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்துவதற்கான வசதிகளை கட்டாயமாக உருவாக்குவதற்கான விதிமுறை களை ஒன்றிய அரசு 3 மாத காலத் துக்குள் அமல்படுத்த வேண்டும். இந்த வசதிகளை உருவாக்குவது முற்போக்கு உணர்வை சார்ந்தது என்பது உண்மைதான்.
ரூ.50 லட்சம்
இந்த கட்டாய விதி முறை கள், விரிவான வழி காட்டு நெறிமுறைகளில் இருந்து மாறு பட்டதாக இருக்க வேண்டும். சட்டப்படி அமல் படுத்தக்கூடிய தாக இருக்க வேண்டும். புதிய விதிமுறைகளை உருவாக்குவதில், ஒன்றிய அரசுக்கு உதவும் பணி, அய்தராபாத்தில் நல்சார் சட்ட பல்கலைக்கழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கல்வி மய்யத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. அங்குள்ள கர்ல்டன் வணிக பள்ளி இப் பணியை மேற்கொண்டு வருகிறது. அதற்காக அந்த நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் இத்தொகையை அளிக்க வேண்டும்.
அபராதம்
மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை உருவாக்குவதை கட்டாயம் கடைபிடிக்கச் செய் தால்தான், பணி நிறைவு சான்றிதழ் அளிக்கப்படும் என்று நிபந்தனை விதிக்கலாம். இந்த விதிமுறையை பின்பற்றாவிட்டால், அபராதம் விதிக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
அடுத்தகட்ட விசாரணையை அடுத்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.