கொல்கத்தா, நவ.8- கடந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் வக்பு சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்க்களும் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இதன் கூட்டங்களில் இருதரப் புக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி நேற்று (7.11.2024) கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் தன்னிச்சையாகவும், ஆதிக்க மனப்பான்மையுடனும் செயல்படுகிறார். அவர் 9-ஆம் தேதி (நாளை) முதல், பரபரப்பான சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அடுத்த 6 நாட்களில், கவுகாத்தி, புவனேஸ்வர், கொல்கத்தா, பாட்னா, லக்னோ ஆகிய ஊர்களில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டங்களை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பார்கள். எதிர்கால நடவடிக்கை குறித்து கூட்டாக முடிவு செய்யப்படும். கூட்டுக்குழுவில் உள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடந்த 5-ஆம் தேதி சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்தோம். இந்த சுற்றுப்பயணத்தை தள்ளி வைக்குமாறும், வாரத்துக்கு 2 நாட்களுக்கு பதிலாக ஒருநாள் மட்டும் கூட்டம் நடத்துமாறும் கேட்டுக்கொண்டோம்.
அதுபற்றி ஜெகதாம்பிகா பாலுடன் பேசுவதாக நாடாளுமன்றத் தலைவர் உறுதி அளித்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
போக்சோ சட்டத்தில் கோயில் பூசாரி கைது
மதுரை, நவ.8 பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கியதாக எழுந்த புகாரின் பேரில், கோயில் பூசாரியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த இணையரின் 17 வயது மகள் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படிக்கிறார். இவருக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டதால், அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், அந்த மாணவி 9 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவியிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, கண்ணனேந்தல் பகுதியில் உள்ள கோயில் பூசாரி ஒருவரே கர்ப்பத்துக்குக் காரணம் என்று கூறியுள்ளார். இதையடுத்து, அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, “மாணவியின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு, அவருக்கு பண உதவி செய்வதாகக் கூறி பூசாரி கோயிலுக்கு அழைத்துள்ளார். ஆரம்பத்தில் கோயிலை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யவைத்திருக்கிறார். பின்னர், பூசாரி மாணவியை கர்ப்பிணியாக்கி இருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. 48 வயதான அந்த பூசாரி மேலும் சில மாணவிகள், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. விசாரணை முடிவில், போக்சோ சட்டத்தில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது” என்றனர்.