புதுடில்லி, நவ. 5- டில்லியில் குறிப்பாக அலிபூர், ஆனந்த் விஹார், அசோக் விஹார், ஆயா நகர், பவானா, புராரி, மதுரா சாலை, அய்ஜிஅய் விமான நிலையம், துவாரகா, ஜஹாங்கீர்புரி, முண்ட்கா, நரேலா, பட்பர்கஞ்ச், ரோகினி, ஷாதிபூர், சோனியா விஹார், வஜீர்பூர், மந்திர் மார்க், நேரு நகர், நஜாஃப்கர் முதலான பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீர் செயலி தெரிவிக்கிறது.
அதுமட்டுமின்றி, தீபாவளி கொண்டாட்டங்களால் டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 21,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவித்ததாவது, அவர்களில் 69 சதவிகிதம் பேர் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு உறுப்பினராவது தொண்டைப் புண், இருமல் போன்ற சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 62 சதவிகிதம் பேர் மோசமான காற்றின் தரம் காரணமாக கண் எரிச்சலை அனுபவித்ததாகவும் கூறியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) காலை 9 மணி நிலவரப்படி டில்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ஆனந்த் விஹார் – 532 அலிபூர் – 318 பஞ்சாபி பாக் – 381 நரேலா – 295 ஆர்.கே.புரம் – 329 பாவனா – 382.
தமிழ்நாட்டில் கல்லூரி பேராசிரியர்களுக்கு இணையவழியில் பொது மாறுதல் கலந்தாய்வு
சென்னை, நவ.5- தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் நடத்தப்படுகிறது.
இந்த கலந்தாய்வின் மூலம், ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் விருப்ப இடமாற்றம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும், ஒவ்வொரு கல்வியாண்டும் இடமாறுதல் கலந்தாய்வு இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேரடி முறையில் நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் ஆசிரியர்களுக்கு இணையவழி முறையில் நடத்தப்படும் பொது மாறுதல் கலந்தாய்வை போலவே, உயர்கல்வித் துறையில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட உயர் கல்வித்துறைதிட்டமிட்டிருப்பதாக கூறப் படுகிறது. இந்தபொது மாறுதல் கலந்தாய்வுகளை ‘யுமிஸ்’ வழியாக நடத்திடவும் உயர்கல்வித்துறைதிட்டமிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.