பாட்னா, நவ.5- பீகாரின் நவாடா மாவட்டத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவைச் சோ்ந்த 34 பேரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட நிகழ்வு மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; இதில் தொடா்புடைய 15 பேரை காவல் துறையினா் இதுவரை கைது செய்துள்ளனா்.
நல்லவாய்ப்பாக இதில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிகழ்விற்குக் கண்டனம் தெரிவித்த மாநில முதலமைச்சா் நிதீஷ் குமார், காவல் துறை கூடுதல் இயக்குநரை அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட உத்தரவிட்டார்.
இச்நிகழ்வு தொடா்பாக நவாடா மாவட்ட ஆட்சியா் கூறுகையில், ‘நவாடா மாவட்டத்தில் உள்ள மஞ்சி தோலா பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இதை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொடா்புடைய 15 பேரை காவல் துறையினா் இதுவரை கைது செய்துள்ளனா்.மொத்தம் 34 வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் 21 வீடுகள் முழுமையாகவும், 13 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன. குற்றவாளிகள் மீது ஆயுத சட்டம் மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்குக் கண்டனம் தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பீகாரில் நடைபெறும் சாமானியா்களுக்கு எதிரான அநீதி ஆட்சியை இந்நிகழ்வு அம்பலப்படுத்துகிறது. வீடு, உடைமைகளை இழந்து தவிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகக் குடும்பங்களின் அழுகுரல்கள், தூங்கிக் கொண்டிருக்கும் மாநில அரசை எழுப்ப முடியவில்லை. இத்தகைய குற்றவாளிகள் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தஞ்சம் அடைகிறார்கள். இந்த விவகாரத்தில் பிரதமா் மோடியின் மவுனம், இது போன்ற நிகழ்வுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் முத்திரையாக இருக்கிறது’ என குறிப்பிட்டார். ‘பீகாரில் சட்டம் – ஒழுங்கு முழுமையாக சீா்குலைந்து விட்டது; முதலமைச்சா் நிதீஷ் குமார் அதை பாதுகாப்பதில் தோல்வி அடைந்துவிட்டார்’ என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் தெரிவித்தார்