மும்பை, நவ.5- மகாராட்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் வேட்புமனுவைத் திரும்ப பெறுவதற்கான அவகாசம் திங்கள் கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 4,140 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
மகராட்டிர மாநில சட்டப் பேரவையின் 288 இடங்களுக்கு நவம்பா் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை – பாஜக – துணை முதலமைச்சா் அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ஆளும் ‘மகாயுதி’ கூட்டணிக்கும் காங்கிரஸ்-சிவசேனை(உத்தவ்)-தேசியவாத காங்கிரஸ்(பவார்) அடங்கிய எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
வேட்புமனுவைத் திரும்ப பெறுவதற்கான அவகாசம் திங்கள்கிழமை நிறைவடைந்த நிலையில் தோ்தல் ஆணையத் தரவுகளின் படி, மொத்தம் 288 இடங்களுக்கு 7,078 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். அதில் 2,938 போ் தங்களின் மனுவை திரும்ப பெற்றனா்.
மொத்தம் 4,140 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இந்த எண்ணிக்கையானது கடந்த 2019-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட 3,239 வேட்பாளா்களைவிட 28 சதவீதம் அதிகமாகும்.
நந்தூா்பார் மாவட்டத்தின் ஷஹாதா தொகுதியில் 3 போ் மட்டுமே போட்டியிடும் நிலையில், பீட் மாவட்டத்தின் மஜல்கவுன் தொகுதியில் 34 வேட்பாளா்கள் பலப்பரீட்சை நடத்துகின்றனா். மும்பை நகரின் 36 தொகுதிகளுக்கு 420 வேட்பாளா்களும் புணே மாவட்டத்தின் 21 தொகுதிகளுக்கு 303 வேட்பாளா்களும் போட்டி யிடுகின்றனா்.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளின் வேட்புமனு தாக்கலின் கடைசி நாள் வரை தொடா்ந்தது.
இதனால், வெவ்வேறு கூட்டணி கட்சிகளின் வேட் பாளா்கள் ஒரே தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தனா்.
கட்சியில் இடம் ஒதுக்காத அதிருப்தியில் நிர்வாகிகள் பலரும் சுயேச்சையாக களமிறங்கினா். இவா்களில் பலா் திங்கள்கிழமையன்று தங்களின் வேட்புமனுவைத் திரும்ப பெற்றனா்.
முந்தைய தோ்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற மேனாள் எம்.பி. ஷெட்டி, இம்முறை கட்சி வாய்ப்பு வழங்கா ததால் போரிவாலி தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கினார். இந்நிலையில், வேட்புமனுவை திரும்ப பெற்ற அவா், கட்சியின் அதிகாரபூா்வ வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ளார்.
தேசியவாத காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த சிவசேனை கட்சி உறுப்பினா்கள் இருவரும், புணே மாவட்டத்தில் உள்கட்சி பூசலால் சுயேச்சையாக களமிறங்கிய பாஜக நிர்வாகி நானே கட்டேவும் போட்டியிலிருந்து விலகினா்.
அதேசமயம், மாஹிம் பேரவைத் தொகுதியில் சிவசேனை வேட்பாளா் வேட்புமனுவை திரும்ப பெறாதது ஆளும் கூட்டணியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக நவநிர்மான் சேனை தலைவா் ராஜ் தாக்கரேவின் மகன் அமித் தாக்கரே பாஜகவின் ஆதரவுடன் களமிறங்கியுள்ளார்.
சுயேச்சையாக களமிறங்கிய காங்கிரஸ் அதிருப்தி நிர்வாகிகள் 7 போ் போட்டியிலிருந்து விலகினா். வடக்கு கோலாபூா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் மதுரிமா ராஜே சத்ரபதி தனது மனுவை திரும்ப பெற்றுள்ளார். இதனால் வடக்கு கோலாபூரில் காங்கிரஸ் சார்பில் யாரும் போட்டியிடாத நிலை ஏற்பட்டுள்ளது.