சென்னை, நவ. 5- தமிழ்நாடு சட்டப் மன்றத்தின் அடுத்த கூட்டம் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப் மன்றத்தின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரியில் நடைபெறும். இந்த ஆண்டில் புயல், மழை, நிவாரணப் பணிகள் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டு, ஆண்டின் முதல் கூட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, 15ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பதில் உரையுடன் அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
தமிழ்நாடு அரசின் 2024-2025ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 19ஆம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசுவும், வேளாண் நிதிநிலை அறிக்கையை 20ஆம் தேதி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, 22ஆம் தேதி வரை நிதிநிலை அறிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு, நிறைவாக அமைச்சர்கள் பதில் அளித்தனர். சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு, சட்டப் மன்றக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
பின்னர், துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றன.
சட்டமன்ற விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிவடைந்தால், அடுத்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்ட மன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு, டிசம்பர் முதல் வாரத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறும் 67ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சட்டமன்றத் தலைவர் மு.அப்பாவு புறப்பட்டு சென்றுள்ளார். அவர் நவம்பர் 17ஆம் தேதி சென்னை திரும்புகிறார். அதன்பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து, சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் தேதியை அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
விஜய் மீது பிஜேபி தாக்கு
சென்னை, நவ.5- தி.மு.க. பேசுவதையே, விஜய் பேசி வருவதாகவும், அவர் தி.மு.க.விலேயே இணைந்திருக்கலாம் என்றும் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
‘நீட்’ தேர்வு
சென்னை தியாகராயர் நகரில் உள்ள பா.ஜனதா தலைமை அலு வலகமான கமலாலயத்தில், தமிழக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் நேற்று (4.11.2024) கூறியதாவது:-
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் செயற்குழு தீர்மானங்களை காணும்போது, அவர் தி.மு.க.வில் இணைந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.தி.மு.க. இத்தனை நாட்களாக கிளிப்பிள்ளை போல் சொல்லி வந்ததையே இவரும் சொல்கிறார்.
‘நீட்’ தேர்வு தொடர்பான மசோதா ஒன்றியத்தில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. முதல் ‘நீட்’ தேர்வு 2013ஆம் ஆண்டு நடைபெற்றது. மறைந்த மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த தேர்வுக்கு ஓராண்டு விலக்கு கேட்டார். 2ஆவதாக மீண்டும் வலியுறுத்தியபோது சிலர் நீதிமன்றத்துக்கு சென்றார்கள். ‘நீட்’ தேர்வு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக தற்போது செயல்பாட்டில் உள் ளது.அதேபோல், கச்சத்தீவு தொடர்பாகவும் விஜய் பேசி உள்ளார். இதிலும், பா.ஜனதாவுக்கு தொடர்பு இல்லை. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றால் இலங் கையுடன் பேசி, ஒப்பந்தம் செய் யாமல் மீட்க முடியாது. தி.மு.க.வின் கொள்கைகளையே விஜய் மீண்டும், மீண்டும் சொல்லி வருவதால், அரசியல் பாதிப்பு அவர்களுக்குதான். விஜய் பா. ஜனதாவின் ‘பி’ டீம் என்கிறார்கள்.
அஜித் கிடைக்க மாட்டாரா?
மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று கூறும் விஜய்,எப்படிபா.ஜன தாவின் ‘பி டீம்’ என்று சொல்ல முடியும்? முதலில்சீமானை பா.ஜனதாவின் ‘பி டீம்’ என்றார்கள். தற்போது விஜயை ‘பி டீம்’ என்கிறார்கள். இத்தனை அணிகளை பா. ஜனதா தாங்காது. இவ்வாறு அவர் கூறினார்.