வட இந்திய தொழிலதிபர்களின் அடாவடித்தனம் எங்கள் தாய்மொழி கன்னடத்தை இழிவுபடுத்துவதா?
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!
பெங்களூரு, நவ.2 கருநாடக மாநிலம் பெங்களூரு புறநகரில் உள்ள அனிக்கேல் பகுதியில் அதிகம் வசிக்கும் வட இந்திய தொழிலதிபர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் கன்னட மொழியில் பெயர் பலகை வைக்கக்கூடாது என்று கூறியது மட்டுமல்லாமல், நகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை உடைத்தும் வீசினர்.
சட்டம் பேசும் வடவர்கள்!
இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த போது சட்டம் பேசிய வடக்கர்கள் கன்னடப்பற்று என்ற பெயரில் எங்கள் பகுதியில் நுழைந்து உள்ளூர் மக்கள் எங்கள் உரிமைகளில் தலையிடுவார்கள் என்றும், எங்கள் உறவினர்கள் எங்களைப் பார்க்க வருவார்கள் – அவர்களுக்குக் கன்னடம் தெரியாது; பெயர்ப் பலகை கன்னடத்தில் இருந்தால், அவர்களுக்குச் சிரமம் இருக்கும்; நாங்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் எங்களுக்கு என்ன இருக்கவேண்டும் என்று கோரும் உரிமை உள்ளது என்று கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இந்த நிலையில் கன்னட கவிஞர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் கன்னட தலைவர்களின் பெயர் பலைகைகளை வைக்கும் நகராட்சி தீர்மானத்தை மதிக்காமல் இருப்பது சட்டவிரோதம் என்று கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை அடுத்து காவல்துறை மேற்பார்வையில் பெயர்த்து வீசப்பட்ட கன்னட மொழி பெயர் பலகைகள் மீண்டும் வைக்கப்பட்டன.
இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நடந்த மொழிவழி கருநாடக மாநிலம் அமைப்புவிழாவில் பேசிய முதலமைச்சர் சித்தராமையா கூறியதாவது:
சட்டம் கொண்டுவருவோம்!
கன்னட மண்ணில் கன்னட மொழிக்கு விரோதமாகவும், கன்னட தலைவர்கள் பெயரை வைக்கக் கூடாது என்று கூறுவதும் எங்கள் சுயமரியாதைக்குச் சவால் விடும் போக்கு ஆகும். கருநாடகா அனைவரையும் வரவேற்கிறது, அதே நேரத்தில் எங்கள் மண்ணிற்கும், மொழிக்கும் இழுக்கு விளைவித்தால் அது தவறு ஆகும்
கன்னட தலைவர்களையும், கன்னட மொழியை இழிவுபடுத்தும் போக்கைக் கண்டிக்கிறேன். இதை தேசத் துரோகமாகக் கருதி, துரோகிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். அதற்காக விரைவில் சட்டத்துறையிடம் கலந்தாலோசித்து சட்டமியற்ற உள்ளேன் என்று கூறினார்.