மும்பை, அக். 30- பாஜக செய்தித் தொடர்பாளர் ஷைனா என்சியை மும்பாதேவி தொகுதியின் வேட்பாளராக சிவசேனை அறிவித்த சில மணிநேரங்களிலேயே, சிவசேனையில் அவர் இணைந்தார்.
மகாராட்டிரத்தில் வரும் நவம்பர் 20 ஆம் தேதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஷைனாவை, மும்பையின் மும்பாதேவி வேட்பாளராக சிவசேனை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, சில மணிநேரங்களிலேயே முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் முன்னிலையில் சிவசேனையில் ஷைனா இணைந்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுடன் ஷைனா பேசியதாவது “நான் என் வாழ்நாள் முழுவதும் தெற்கு மும்பையில் வசித்து வருகிறேன். இங்குள்ள மக்களின் அன்றாட சவால்களை என்னால் உணர முடிகிறது. மும்பை மக்களுக்காக நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருக்க விரும்பவில்லை; நான் மக்களின் குரலாகவே இருக்க விரும்புகிறேன்.
எனக்கு செயலாளர் இல்லை; ஆகையால், எனது அனைத்து அழைப்புகளுக்கும் நானே பதிலளிக்கிறேன். எனது குடிமக்களுக்கு நான் எப்போதும் பொறுப்புக் கூறக்கூடியவராக இருப்பேன்’’ என்று தெரிவித்தார்.
அரசியல் குற்றங்களுக்கு
கடும் நடவடிக்கை:
மகாராட்டிர டிஜிபியிடம்
தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்
மும்பை, அக். 30- மகாராட்டிரத்தில் அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மாநில காவல்துறை தலைமை இயக்குநர் ராஷ்மி சுக்லாவிடம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘மகாராட்டிரம், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக அவ்விரு மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், காவல் துறை தலைவர்கள், மூத்த அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் 29.10.2024 அன்று ஆலோசனை மேற்கொண்டார். இரு மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு சூழலை ஆய்வு செய்ய இந்தக் கூட்டம் நடைபெற்றது.
மகாராட்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் பாபா சித்திக் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த மாநிலத்தில் அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மகாராட்டிர காவல்துறை தலைமை இயக்குநர் ராஷ்மி சுக்லாவிடம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வலியுறுத் தினார்’ என்று தெரிவித்தன.
மகாராட்டிரம் மற்றும் ஜார்க்கண்டில் தேர்தலையொட்டி பணம், மதுபானம், போதைப்பொருள்கள், இலவசங்களின் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இரு மாநில அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அழுத்தமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை ஜார்க்கண்டில் ரூ.114 கோடிக்கு அதிகமாகவும், மகாராஷ்டிரத்தில் ரூ.175 கோடி மதிப்பிலும் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கடந்த 2019-ஆம் ஆண்டு இரு மாநிலங்களிலும் பறிமுதல் செய்யப்பட்டதைவிட 2.3 மடங்கு அதிகம்.