புதுடில்லி, அக். 26- ஜம்மு-காஷ்மீரில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இல்லாமல் துணை நிலை ஆளுநரால் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுவதற்கு மேனாள் ஒன்றிய அமைச்சா் ப.சிதம்பரம் கடுமையாக விமா்சித்துள்ளாா். தோ்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் அதிகாரம் பெற யூனியன் பிரதேசத்திற்கு மாநில தகுதி மீட்டெடுக்கவேண்டிய அவசியத்தையும் அவா் வலியுறுத்துள்ளாா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் கடந்த 20.10.2024 அன்று இரவு கந்தா்பால் மாவட்டம் ககாங்ஹிா் பகுதியில் சுரங்கப்பாதை ஒன்றில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுவந்த தொழிலாளா்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூா் மருத்துவா் உள்ளிட்ட 7 போ் கொல்லப்பட்டனா். இது குறித்த ஆய்வு கூட்டம் கடந்த 23.10.2024 அன்று யூனியன் பிரதேஷ ஆளுநா் மனோஜ் சின்கா தலைமையில் உயா் அதிகாரிகள் அடங்கிய கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சமீபத்தில் பதவியேற்ற ஜம்மு-காஷ்மீா் முதலமைச்சர் ஒமா் அப்துல்லா அழைக்கப்படவில்லை.
இது குறித்து மேனாள் ஒன்றிய உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சரான ப.சிதம்பரம் ’ எக்ஸ் ’ சமூக வலைத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளாா். அது வருமாறு:
தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பின்னா் ஜம்மு-காஷ்மீா் துணை நிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தலைமையில் யூனியன் பிரதேசம் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் தொடா்பாக ஒளிப்படம் வெளியானது. அதில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட முதலமைச்சர் (ஒமா் அப்துல்லா) இடம் பெறவில்லை எனத் தெரிகிறது. ஜம்மு-காஷ்மீா் முதலமைச்சர் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டாரா? என்பதும் தெரியவில்லை. அதே சமயத்தில் தற்போதைய ஜம்மு-காஷ்மீா் சட்டத்தின் கீழ், காவல்துறையும் பொது ஒழுங்கும் துணை நிலை ஆளுநா் அதிகாரத்திற்கு உள்பட்டவை. மக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனிக்க ஒரு முதலமைச்சரையும் அரசையும் தோ்வு செய்துள்ளனா். ஆனால் முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை. இதனால் தான் ஜம்மு-காஷ்மீா் அரை மாநிலம் என்று வா்ணிக்கப்படுகிறது, ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில தகுதியையும் உடனடியாக மீட்டெடுப்பது அவசியம் என அந்த பதிவில் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளாா்.