ராஞ்சி, அக்.24 ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி தாவியவர்களுக்கும் மேனாள் தலைவர்களின் வாரிசுகளுக்கும் பாஜக பெரும் அளவில் வாய்ப்பு வழங்கி உள்ளதால் அம் மாநில பாஜகவினர் கடும் அதிருப்தி அடைந் துள்ளனர்.
ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு வருகிற நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடை பெறவுள்ளது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜெ.எம்.எம்.), காங்கிரஸ் கூட் டணி மற்றும் பாஜ கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான பாஜகவின் வேட்பாளர்களின் பட்டி யலில் இடம்பெற்றுள்ள 66 வேட்பாளர்களில் பல் வேறு கட்சிகளிள் இருந்து சமீபத்தில் பாஜகவிற்கு தாவிய 35 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதால் மாநில பாஜகவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
உயர்மட்ட அரசியல் வாதிகளின் நெருங்கிய உறவினர்கள் பலருக்கும் சீட் வழங்கப்பட்டு இருப்பதும் பாஜகவின் உட்கட்சி பூசலுக்கு வித்திட்டுள்ளது. குறிப்பாக மேனாள் முதலமைச்சர் ரகுபர் தாஸின் மருமகள் பூர்ணிமா தாஸ் சாஹு வுக்கு பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது. அர்ஜுன் முண்டாவின் மனைவி மீரா, சம்பை சோரனின் மகன் பாபுலால் சோர னுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு சில மணி நேரத்திற்கு முன் பாஜகவுக்குத் தாவிய சி.பி. சவுத்ரியின் சகோதரர் ரோஷன் லால், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் துல்லு மகதோவின் சகோதரர் சத்ருகன் மகாதேவ் ஆகியோரின் பெயர்களும் வேட்பாளர் பட்டியலில் உள்ளனர். இதனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்த பாஜக உள்ளூர் மூத்த தலைவர்கள் பலர் கடும் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.