மதுரை, அக். 23- நித்யானந்தா தலைமறைவாக இருந்துகொண்டு இந்திய நீதித்துறைக்கே சவால் விடுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. நித்யானந்தாவின் பெண் சீடர் சுரேகா தனக்கு முன் பிணை வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் பிணை மனுத் தாக்கல் செய்திருந்தார்.
கருநாடக மாநிலம் பிடதியைச் சேர்ந்த சுரேகா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கணேசன் என்பவருக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை நித்யானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் அபகரிக்க முயன்றதாக எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் அப்படி எந்த முயற்சியும் செய்யவில்லை. பொய்யான புகாரை கொடுத்து எங்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். எனவே, தனக்கு முன் பிணை வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது , நித்யானந்தாவின் சீடர்கள் நிலத்தை ஆக்கிரமிக்கும் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவதாக கணேஷ் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அப்போது, சுரேகாவுக்கு முன் பிணை தர வேண்டும் என நித்யானந்தாவின் ஆதரவு வழக்குரைஞர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி; நித்யானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுகிறார். நித்யானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது; ஆனால் நீதிமன்றத்திற்கு வருவதில்லை. முதலில் நித்யானந்தாவை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லுங்கள். நித்யானந்தா சொத்துக்களை இந்தியன் ஜூடிசியல் பாதுகாக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி, “இட விகாரத்தில் இனி தலையிட மாட்டேன்” என உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்தால் முன் பிணை குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்து வழக்கு விசாரணையை அடுத்த நாளுக்கு ஒத்திவைத்தார்.
நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகள்
சராசரியாக ஒரு நாளைக்கு
474 பேர் உயிரிழப்பு
புதுடில்லி, அக். 23– நாடு முழுவதும் ஏற்படும் விபத்துகள் குறித்த புள்ளிவிவரங்களை ஒன்றிய அரசுக்கு மாநில அரசுகள் அனுப்பி வைக்கின்றன. அதன்படி கடந்த 2023ஆம் ஆண்டு 1.7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி பார்த்தால் 3 நிமிடங்களுக்கு ஒருவரும் அல்லது ஒரு நாளைக்கு சராசரியாக 474 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தேசிய அளவில் ஏற்படும் விபத்துகள், எதனால் ஏற்படுகின்றன, எந்தெந்த வகைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன என்பதை அறிய ஒன்றிய அரசு தகவல்கள் திரட்ட தொடங்கியது. அதன் அடிப்படையில் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள், செயல் திட்டங்களை ஒன்றிய அரசு வகுத்து வருகிறது. எனினும், கடந்த ஆண்டு சாலை விபத்துகள் அதிகமாக நடைபெற்றுள்ளன. விபத்துகளில் உயிரிழப்போர் மட்டுமன்றி படுகாயம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அதன்படி கடந்த ஆண்டு மட்டும் விபத்துகளில் 4.63 லட்சம் பேர் விபத்துகளில் காயம் அடைந்துள்ளனர். இது கடந்த 2022ஆம்ஆண்டு ஏற்பட்ட காயங்களின் எண்ணிக்கை விட 4 சதவீதம் அதிகம்.