தந்தை பெரியார் சிந்தனைகளை முன்னின்று எடுத்துச் செல்ல வேண்டும்
பசுமையான இந்தக் கல்வி வளாகம் கற்பதற்கு உகந்ததாக உள்ளது
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினரும், வருமான வரித்துறை
ஆணையருமான எஸ்.மருதுபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை விருந்து
நேற்று (19.10.2024) வல்லம் பெரியார் மணியம்மை வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தி னராகப் பங்கேற்ற – வருமான வரித்துறை ஆணையர் (வரிவிலக்கு) எஸ்.மருதுபாண்டியன் அவர்கள், தனது பட்டமளிப்பு விழாப் பேருரையில், இப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுச் செல்லும் இருபால் மாணவர்களும் இந்நிறுவனத்தை உருவாக்கியவர்களின் சிந்தனைகளை உள்வாங்கி, தந்தை பெரியார் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும், இப்பல்கலைக் கழக வளாகம் மாணவர்கள் கல்வி பயில உகந்த பசுமை சூழ்ந்ததாக இருக்கிறது என்றும் பாராட்டினார்.
அவரது உரை வருமாறு:
பெருமதிப்பிற்குரிய வேந்தர் அய்யா அவர்களே, மரியாதைக்குரிய விருந்தினர்களே, ஆசிரியர்களே, பெருமைமிகு பெற்றோர்களே, மிக முக்கியமாக நேசமிகு பட்டதாரிகளே.
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழாப் பேருரை யாற்ற உங்கள் முன் நிற்பதை எண்ணி மிகவும் பெருமை அடைகின்றேன். உங்கள் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் சாதனைகளை எண்ணி கொண்டாடும் நாள் இன்று. இந்த இடத்தை அடைவதற்கு சவால்கள் நிறைந்த நீண்ட பயணத்தை கடந்துவந்திருப்பீர்கள். நாங்கள் உங்கள் வெற்றியை அங்கீகரித்து அதனைக் கொண்டாட இங்கே கூடியிருக்கிறோம்.
இந்த நிறுவன வளாகத்தை விட்டுச் செல்ல இருக்கும் நீங்கள் இந்த நிறுவனத்திற்கு வித்திட்ட மிகச்சிறந்த தொலைநோக்குச் சிந்தனையாளர்களை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும். உங்களுடைய இலக்கில் நீங்கள் தெளிவாக, திண்ணமாக இருக்க வேண்டும். தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை முன்னின்று எடுத்துச் செல்லவேண்டும்.
வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள், பறிக்கப்பட்டவர்கள் பன்னெடுங்காலமாக கண்டுகொள்ளப்படாமல் கைவிடப்பட் டோ ருக்கு அறிவைப் புகட்டி அவர்களிடத்தில் மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும்.
நமது நிறுவனம் கடந்த 35 ஆண்டு களுக்கு மேல் கல்வி அறிவைப் புகட்டி வருகிறது என்பதை அறிந்து நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். இந்த சமுதாய மாற்றத்திற்கான செயலில் உங்கள் பங்களிப்பும் உள்ளது என்பதை எண்ணி நாங்கள் பெருமை கொள்கின்றோம்.
உங்களுடைய சாதனைகளை நான் பார்க்கின்றபொழுது இந்த நிறுவனம் உங்களை கல்வியில் சிறந்தவர்களாக்கியது மட்டுமின்றி, சமூக தொடர் வளர்ச்சிக்கு உங்களின் பங்களிப்பை வழங்க உங்களை உத்வேகப்படுத்தியும் உள்ளது. உலகிலேயே முதன் முதலாக மகளிருக்கென்று ஒரு தனிப்பெரும் பொறியியல் கல்லூரியாக தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பரிணமித்து பல வளர்ச்சிகளைக் கண்டு பல்கலைக்கழகமாக வளர்ந்து கலங்கரை விளக்கமாக நின்று மிகச் சிறந்த கல்வியினை குறிப்பாக மகளிர் மற்றும் நடுத்தரவர்க்கத்தினருக்கு அறிவியல் தொழில்நுட்பக்கல்வியினை வழங்கிவருகிறது. தற்பொழுது ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமாக தொடர்ந்து நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் உலக சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும் தன்னுடைய பங்களிப்பை உத்வேகத்துடன் வழங்கிக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட மேம்பட்ட உயர்ந்த உலகில் நீங்கள் இந்த நிறுவனத்தில் பட்டம் பெற்ற தூதுவர்களாக அடியெடுத்து வைப்பதில் பெருமை கொள்ளுங்கள்.
பசுமையான கல்வி வளாகம்
பசுமையான இந்தக் கல்வி வளாகம் நீங்கள் கற்பதற்கு உகந்ததாக இருக்கிறது என்பது மட்டுமின்றி, உங்கள் முழுமையான தொடர் வளச்சிக்கான முன் எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளது என்பதை நான் உணர்கின்றேன். உங்களை புதுயுக்திகளுடன் கூடிய பொறுப்புள்ளவர்களாக ஆக்கியுள்ளது. இந்த நிறுவனம் எரிசக்தியில் தற்சார்புடையதாகவும், சுற்றுச்சூழலுக்கு உற்ற நண்பனாகவும், மாசுபடுதலுக்கு எதிராக செயல்படத் தேவையான மீத்தேன் உயிர் வாயுக்கள் பயன்பாடு மாற்றுக்கட்டுமானப் பொருட்கள் பயன்பாடு, காகித மறுசுழற்சி போன்றவைகள் இங்கு செயல்படுத்தப்பட்டு வருவது என்பது உலக கல்வி நிறுவனங்களுக்கு ஒரு முன் உதாரணமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மேம்பட்ட தொடர் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு என்பது இந்த நிறுவனத்தின் இலக்கு மட்டும் அல்ல அது எதிர்கால தலைவர்களாகவும், மாற்றத்தை உருவாக்க உள்ளவர்களாகவும் உள்ள உங்களுக்காகதான் இந்த அர்ப்பணிப்பு என்பதை வெளி உலகில் அடியெடுத்து வைக்கவுள்ள நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
‘பெரியார் புரா’ திட்டம்
கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி என்ற வேற்றுமையை களைவதற்காக டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களால் ‘பெரியார் புரா’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு சமுதாய வளர்ச்சிக்காக இந்த நிறுவனம் அர்ப்பணிப்பு மனப்பாண்மையுடன் பணிகளை மேற்கொண்டுவருகிறது என்பதை அறிந்து உண்மையிலேயே பேரின்பம் அடைகின்றேன். மக்களைச் சென்றடையும் இந்த அரிய அர்ப்பணிப்பு நடைமுறைகள் உண்மையான கல்வி என்பது வகுப்பறையில் கற்பது மட்டுமல்ல – அதனையும் தாண்டி என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடிய நேர்மறையான ஒரு தாக்கத்தை சமூதாயத்தில் ஏற்படுத்துவதே என்பதை எனக்கு உணர்த்துகிறது.
பட்டம் பெற்று உங்களது பணியென்னும் பயணத்தை நீங்கள் தொடங்கும் பொழுது பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் உங்களுக்கு அளித்துள்ள நெறியான வழி முறைகள் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு வழிகாட்டும். நீங்கள் பெற்ற கல்வி உங்களை அறிவுள்ளவராக மாற்றியது மட்டுமல்ல, அது ஒரு குறிக்கோளுடன் உங்களை உருவாக்கி உள்ளது. அதன்படி நீங்கள் உலக சமுதாய மாற்றத்திற்கான முகவர்களாக, தூதுவர்களாக திகழ்வீர்கள். நீங்கள் தொழில்நுட்பங்கள், வணிகம் ஆய்வு அல்லது கல்வியியல் போன்ற எந்தத்துறையைத் தேர்ந்தெடுத்தாலும் சரி எப்பொழுதும் சமூக நீதிக்கொள்கைகளை நிலைநாட்டவும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் இங்கு கற்றுக்கொண்டுள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
உலகத்தரம் வாய்ந்தது!
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கல்வி நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய நூலகம், நவீன உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி இணைச்செயல்பாடுகளுக்கான கட்டமைப்புகள் போன்ற நீங்கள் வெற்றி பெறத் தேவையான அனைத்தையும் வழங்கியுள்ளது. இந்த கல்வி வளாகம் நீங்கள் முழுமையான கல்வி பெற்று கல்வியில் சிறந்து விளங்கச் செய்ததுமட்டமல்லாமல், கல்வி பெற்ற உங்களை சவால்கள் நிறைந்த உலகை தனிமனிதர்களாக எதிர்கொள்ள தயார்ப்படுத்தியுள்ளது.
பசுமையான இந்த அழகிய கல்வி வளாகத்தை விட்டு நீங்கள் சென்று இன்று உங்களுக்கு எதிரே உள்ள உலகை எதிர்கொள்ள தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் பயணம் இங்கு முடியவில்லை அது தொடங்குகிறது உங்களைப் போன்ற தலைவர்களுக்காக உலகம் உங்களின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. புது கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவதற்கும், சுற்றுச்சூழலைக் காப்பதற்கும், சமூகமுன்னேற்றத்திற்கும், நீங்கள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு துறையிலும் மாற்றம் ஏற்படுத்துவதற்கும் உங்களைப் போன்ற தலைவர்கள் அஞ்சுவதில்லை.
பல ஆண்டுகள் கடினமாக உழைத்து கல்வியில் பல சிறப்பு நிலைகளைப் பெற்று பட்டங்களுடன் முன்னோக்கி நன்னெறியுடன் செல்லும் உங்களை மீண்டும் ஒருமுறை மனதார வாழ்த்துகிறேன்.