புதுடில்லி, அக். 19- மகாராட்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என எதிர்பார்க்கப்படுகிறது.
இண்டியா கூட்டணியை பலம் பெறச் செய்வதற்காக ஆம் ஆத்மி இம்முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. டில்லி மற்றும் பஞ்சாபில் ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது. சமீபத்திய அரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் இக்கட்சி போட்டியிட்டது. அரியானாவில் முற்றிலும் தோல்வி அடைந்தாலும் ஜம்முவில் ஒரு தொகுதி கிடைத்தது.
ஜம்முவின் தோடா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மல்லீக் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கெனவே குஜராத் மற்றும் கோவாவில் ஆம் ஆத்மிக்கு சில சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் 5ஆவது மாநிலமாக ஜம்மு காஷ்மீரில் கால்தடம் பதித்துள்ளது ஆம்
ஆத்மி.
இச்சூழலில் எதிர்வரும் மகாராட்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என ஆம் ஆத்மி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது,
“அதிகநம்பிக்கை வைத்தால் நமது நிலைஎன்னவாகும் என்பது அரியானாவில் புரிந்தது. மகாராட்டிரா, ஜார்க் கண்டில் எங்கள் கட்சிக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை. எனவே அங்கு வீம்புக்காக போட்டியிடுவதில் அர்த்தம் இல்லை. இதைவிட இவ்விரு மாநிலங்களிலும் நாங்கள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணி கட்சி களுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரும் டில்லி சட்டப்பேரவை தேர்தலில் முழு கவனம் செலுத்துவதற்காகவும் ஆம் ஆத்மி இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
உலகிலேயே சென்னையில்தான் அதிக சிசிடிவி கேமரா
சென்னை, அக். 19- உலகிலேயே சென்னையில்தான் அதிக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், இதற்கடுத்து அய்தராபாத்தில் 480 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. டில்லியில் 289 சிசிடிவி கேமராக்களே உள்ளதாகவும் அத்தகவலில் கூறப்பட்டுள்ளது.