மும்பை, அக்.14 மகாராட்டிர மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புவதாக தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் தலைவர் சரத் பவார் நேற்று 13.10.2024 தெரிவித்தார்.
மக்களின் இந்த எண்ணம் அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் குறிப்பிட்டார். மும்பையில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படல், சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
செய்தியாளர் சந்திப்பின்போது சரத் பவார் பேசியதாவது, நாட்டில் மிகச்சிறந்த நிர்வாகத்தைக் கொண்டது சரத் பவார் தலைமையிலான மகாராட்டிர அரசு. இப்போது அது சீரழிந்துவிட்டது.தற்போதைய ஆட்சியில் இருந்து மக்களை விடுவிக்க விரும்புகிறோம். அதற்கு மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறோம். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். மக்களின் இந்த எண்ணம் தேர்தலில் எதிரொலிக்கும். நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றி மாநில சட்டப்பேரவையிலும் எதிரொலிக்கும்.
கயவர்களால் எனக்கும் உத்தவ் தாக்கரேவுக்கும் மட்டும் துரோகம் இழைக்கப்படவில்லை. மகாராஷ்டிரமே தற்போதைய ஆட்சியில் துரோகத்தை சந்தித்துள்ளது. இது மகாயுதி என்னும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக கூட்டணி செய்த மிகப்பெரிய பாவம் எனக் குறிப்பிட்டார்.