1956 அக்டோபர் 14இல் அம்பேத்கர் நாக்பூரில் புத்த மதம் தழுவியபோது 10 லட்சம் மக்கள் கூடினார்கள்
புத்த மதத்தைப் போற்றிப் பிரச்சாரம் செய்த நாகர் மக்கள் வாழ்ந்த இடம் என்பதாலும் இந்தியாவின் மய்யத்தில் அமைந்துள்ள நகரம் என்பதாலும் அம்பேத்கர் நாக்பூரைத் தேர்வு செய்தார்
அவர் புத்தம் தழுவிய அந்த நிகழ்வு, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வரும் இந்து மதத்தில், தலைமுறை தலைமுறையாய்த் தொடரும் ஜாதிய இழிவுகள் மற்றும் வன்கொடுமைகளை எதிர்த்து நடந்த ஒரு மகத்தான புரட்சிகர நடவடிக்கையே ஆகும்.
புரட்சியாளர் அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து வெளியேறியது ஏன்? இது வழக்கமான மதமாற்றம் தானா? அவர் மட்டுமே அல்லாமல் பல லட்சம் பேருடன் புத்தம் தழுவியது ஏன்? கடவுள் வழிபாடு, மோட்சம் போன்ற ஆன்மிகத் தேடலுக்கான ஒரு மாற்று முயற்சியா?.. இவை போன்ற கேள்விகள் யாவற்றுக்கும் ஒரே விடை, இது சமத்துவத்தை முற்றிலும் மறுக்கும் ஸநாதன கோட்பாட்டுக்கு எதிரான ஒரு மாபெரும் ஜனநாயக அறப்போர் என்பதே ஆகும்.
அம்பேத்கர் கடவுளைத் தேடவோ மோட்சத்தை நாடவோ முயற்சிக்கவில்லை. மாறாக, சமத்துவத்தை வென்றெடுப்பதற்கான போராட்டங்களையே முன்னெடுத்தார். அத்தகைய போராட்டங்களின் உச்சநிலை தான் பெருந்திரளாக புத்தம் தழுவிய பண்பாட்டுப் புரட்சியாகும். எனவே, இது ஒரு வழக்கமான மதமாற்றமல்ல. ஏனெனில், புத்தம் என்பது ஒரு மதமில்லை. அது ஸநாதனத்துக்கு எதிரான ஒரு ஜனநாயகக் கோட்பாடு. மானுட சமத்துவத்துக்கு வழிகாட்டும் ஒரு வாழ்வியல் அறநெறி. பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு என்னும் கற்பிதங்களை நொறுக்கும் வல்லமை வாய்ந்த ஒரு புரட்சிகரக் கருத்தியல். ஒவ்வொரு தனிநபரும் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறை மற்றும் சமூக ஒழுங்குமுறை ஆகியவற்றைப் போதிக்கும் மானுடப் பொதுமறை. அத்தகைய புத்தமதத்தையே புரட்சியாளர் அம்பேத்கர் பெரும்திரளான மக்களோடு ஏற்றுக் கொண்டார்.
அம்பேத்கர், தான் ஏற்றுக்கொண்ட புத்தமதமானது, தற்போது திரிபுநிலை அடைந்துள்ள மகாயானமோ ஹீனயானமோ அல்ல என்பதை உணர்த்தும் வகையில், அதனை ‘நவயானம்‘ என்று அறிவிப்பு செய்தார். அதாவது புதிய புத்தம் அல்லது புதிய பாதை என அறிவித்தார்.
புத்தத்தில் இறைக்கோட்பாடே இல்லை என்பதால், அது அத்தகைய வரையறைகளுக்குட்படாத ஒன்றாகிறது. அதாவது, புத்தம் என்பது கடவுள், உருவம், அருவம், அருவுருவம், வழிபாடு, வழிபாட்டுத்தலம், மந்திரம், சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் போன்றவற்றுடன் இம்மை, மறுமை, சொர்க்கம், நரகம் போன்ற நம்பிக்கைகளையும் கொண்ட ஒரு நிறுவனம் இல்லை. அத்துடன், கவுதமபுத்தர் இயேசுபிரானைப் போல ஆண்டவரோ, நபிகள் நாயகத்தைப் போல இறைத்தூதரோ அல்ல. அவர், மாயைகளில்லா மானுடப் பொதுமறை வழங்கிய ஒரு மாமனிதர். எனவே, அவரது போதனைகளான புத்தம் என்பது ஒரு மதம் அல்ல; சமத்துவ கலாசாரத்தைப் பரப்பும் ஒரு சங்கம்.
அந்த வகையில் புதியபுத்தம் என்னும் நவாயானம் என்பது புரட்சியாளர் அம்பேத்கர் விளக்கும் ஒரு புதியபாதையாகும். ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்கிற அறநெறி தொகுப்பானது, புரட்சியாளர் அம்பேத்கர் வழங்கியுள்ள ஆதிபுத்தம் ஆகும்.
புரட்சியாளர் அம்பேத்கர் புத்த கோட்பாட்டை, அதன் அடிப்படை கருத்து சிதையாத வகையில் அடுத்தடுத்த தலை முறையினரிடையே பரப்பும் முயற்சியில்தான் நவயான புத்தத்தை முன்மொழிந்துள்ளார். இந்த புதிய புத்தத்தின் மூலம் ஸநாதனத்தை வேரறுக்க முடியுமென்பதே அம்பேத்காரின் நம்பிக்கையாகும்.