சிறீநகர், அக்.10- காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் இணைந்த இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்று உள்ளது. இதில் இருந்து ஒன்றிய அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘இந்த தேர்தலை ஒரு பாடமாக டில்லி (ஒன்றிய அரசு) எடுத்துக்கொள்ள வேண்டும். தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் தலைமையில் ஒரு நிலையான அரசுக்கு காஷ்மீர் மக்கள் வாக்களித்துள்ளனர். புதிய அரசு விவகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடக் கூடாது. அப்படி செய்தால் பேரழிவு ஏற்படும். அது ஏற்கனவே இருந்ததை விட மோசமாக இருக்கும்’ என எச்ச ரிக்கை விடுத்தார். சட்டசபை தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு குறைந்த இடங்களே கிடைத்திருப்பது குறித்த கேள்விக்கு அவர், ‘இது மக்களின் விருப்பம், நாம் அதை நிச்சயம் ஏற்க வேண்டும். ஜனநாயகத்தில் இதுவும் ஒரு பகுதிதான்’ என பதிலளித்தார். காஷ்மீரில் ஒரு நிலையான அரசை மக்கள் விரும்பியிருப்பதை நம்புவதாக மெகபூபா, அதற்காகவே தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணியை அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற அவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
பழங்கள், காய்கறிகளின் விலை உயர்ந்தாலும் அதிக விலை உயர்வின் பலன் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை
ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை தகவல்
புதுடில்லி, அக்.10- விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழம் மற்றும் காய்கறிகளில், அவர்களுக்கு சந்தை விலையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக் கையில், ‘உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கான காரணங்களை மதிப்பிடும் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின்படி, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழம் மற்றும் காய்கறிகளில் அவர்களுக்கு சந்தை விலையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கிறது. தக்காளி விவசாயிகளுக்கு சந்தை விலையில் 33 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. வெங்காய விவசாயிகளுக்கு சந்தை விலையில் 36 சதவீதமும், உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு 37 சதவீதமும் கிடைக்கிறது.
வாழை விவசாயிகளுக்கு சந்தை விலையில் 30.8 சதவீதமும், திராட்சை விவசாயிகளுக்கு 35 சதவீதமும், மா விவசாயிகளுக்கு 43 சதவீதமும் கிடைக்கிறது. பால் பண்ணையாளர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களின் விலையில் 70 சதவீதம் வரை பெறுகின்றனர். முட்டை உற்பத்தியாளர்களுக்கு சந்தை விலையில் 75 சதவீதமும், கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு சந்தை விலையில் 56 சதவீதமும் கிடைக்கிறது. மழை, வறட்சி, பருவநிலை போன்ற பல்வேறு காரணங்களால் பழங்கள், காய்கறிகளின் விலை உயர்ந்தாலும், அதிக விலை உயர்வின் பலன் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அதிக குளிர்பதன அமைப்புகள், சூரிய ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் போன்றவற்றை உருவாக்க வேண்டும்’ என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.