புதுடில்லி, அக்.10 ‘அரியானா சட்டப் பேரவைத் தோ்தல் முடிவு எதிர்பாராதது. தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும்’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
‘அரியானா சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், தோ்தல் முடிவுகள் முற்றிலும் மாறாக அமைந்தன. பா.ஜ.க. 48 தொகுதி களில் வெற்றியைப் பெற்று தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தோ்தல் முடிவுகள் வெளியான 8.10.2024 அன்று தோல்வி குறித்து ராகுல் காந்தி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் மட்டுமே கருத்து தெரிவித்தனா்.
இந்நிலையில் ராகுல் காந்தி நேற்று (9.10.2024) ‘எக்ஸ்’ வலை தளத்தில் வெளியிட்ட பதிவில்,
‘ஜம்மு-காஷ்மீரில் ‘இந்தியா’ கட்சிகளின் கூட்டணிக்கும், ‘அரியானாவில் காங்கிரசுக்கும், வாக்களித்த மக்கள் அனைவ ருக்கும் நன்றி. ‘அரியானா தோ்தல் முடிவு எதிர்பாராதது. இந்தத் தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சி ஆய்வு நடத்தும். முடிவுகள் தொடா்பாக சில தொகுதிகளில் இருந்து வந்த புகார்களை தோ்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் வெற்றிக்காக அயராது பாடுபட்ட கட்சித் தொண்டா்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது உரிமைகள், சமூக பொருளாதார நீதி, உண்மை ஆகியவற்றுக்கு ஆதரவாக நாம் தொடா்ந்து குரல் எழுப்ப வேண்டும்’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.