குடியரசு துணைத் தலைவருக்கு கார்கே எதிர்ப்பு கடிதம்
புதுடில்லி,அக்.6- காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக உள்ள மல்லிகார்ஜூன கார்கே, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அவருக்கு நாடாளுமன்ற வளாகத் தில் தனி அறை ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த அறையில் கார்கேவுக்கு தெரியாமல் சிபிடபிள்யூடி (ஒன்றிய பொதுப்பணித் துறை) அதிகாரிகள், சிஅய்எஸ்எப் வீரர்கள், டாடா திட்ட அதிகாரிகள் நுழைந்ததாக தெரிகிறது. இதை கண்டித்து மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு கார்கே கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் எனது அறையில் நடந்த இந்த ஊடுருவல் எனக்கு அதிக அவமரியாதையை கொடுத்துள்ளது.
இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. யாருடைய அதிகாரம் மற்றும் அறிவுறுத்தலின் கீழ் அவர்கள் அனுமதியின்றி எனது அறைக்குள் நுழைந்தார்கள் என்பதை அறிய நான் கோருகிறேன். இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்கட்சித் தலைவரின் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
ஜெகதீப் தன்கர் பதில் தர மறுப்பு: கார்கே அலுவலகத்தில் சிஅய்எஸ்எப் படை வீரர்கள் நுழைந்தது குறித்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரின் அலுவலகத்தை அணுகிய போது, அதிகாரிகள் ‘இந்த விடயத்தில் இப்போது வரை எந்த பதிலும் இல்லை’ என்று கூறினர். அதே போல் சிஅய்எஸ்எப் தரப்பிலும் இந்த விடயத்தில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால், பராமரிப்பு பணிகளுக்காக சென்ற ஒன்றிய பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக சிஅய்எஸ்எப் வீரர்கள் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
50 மீனவர்கள் விடுதலை
ரூ.1.60 கோடி அபராதம், ஒருவருக்கு சிறை!
சீர்காழி, அக்.6- சீர்காழி அருகே பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இரண்டு பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற 37 மீனவர்களை கடந்த மாதம் 21ஆம் தேதி காலை நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற னர். இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த மாதம் 4ஆம் தேதி 4 மீனவர்களும், கடந்த 7ஆம் தேதி 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் காவல் முடிந்து 4.10.2024 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 21ஆம் தேதி கைதான 37 மீனவர்களையும் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது என எச்சரித்து நீதிமன்றம் விடுதலை செய்தது. மற்ற 18 பேரில் 4 படகு ஓட்டுநர்களுக்கு தலா ரூ.40 லட்சம் அபராதமும், ஆனந்தபாபு (36) என்ற மீனவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்தற்காக 18 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. 4 பேர் அபராதம் கட்டாததால் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 13 மீனவர்களையும் வரும் 5 ஆண்டுகளில் எல்லை தாண்டி மீன் பிடித்தால் 18 மாத சிறை த்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.