அலகாபாத், அக் 6- இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் 90 விழுக்காடு மக்கள் நிர்வாக அமைப்பைவிட்டு விலகி வெளியே இருப்பதாகவும், அவர்களுக்காக இந்த கணக்கெடுப்பு அவசியம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில்நடைபெற்ற சம்விதான் சம்மான் சம்மேளனம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, “90 விழுக்காடு மக்களுக்கு திறனும், கல்வியறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்கு தொடர்பில்லை. இதன் காரணமாகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளோம். காங்கிரஸுக்கு, கொள்கை உருவாக்கத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பே அடிப்படையானது” என்றார்.
அரசை விமர்சித்ததற்காக இதழியலாளர்கள் மீது
குற்றவியல் வழக்குக் கூடாது! உச்சநீதிமன்றம்
புதுடில்லி, அக்.6- அரசை விமா்சித்து எழுதியதாகக் கருதி இதழியலாளா்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் 4.10.2024 அன்று தெரிவித்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சோ்ந்தவா் இதழியலாளா் அபிஷேக் உபாத்யாய. இவா் அந்த மாநில அரசுப் பணிகளில் குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், ஜாதி அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியும் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டார்.
இதையடுத்து அவா் மீது லக்னோ காவல் நிலையத்தில் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அபிஷேக் உபாத்யாய மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டீ ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பாக 4.10.2024 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘அரசை விமா்சித்து எழுதியதாகக் கருதி இதழியலாளா்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யக் கூடாது. ஜனநாயக நாட்டில் தனது கருத்துகளை வெளிப்படுத்தும் ஒருவரின் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கப்படுகிறது. அத்துடன் அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)-இன் கீழ், இதழியலாளா்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன’ என்று தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து மனு தொடா்பாக பதிலளிக்க உத்தரப்பிரதேச அரசுக்கு தாக்கீது பிறப்பித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா். அதுவரை அபிஷேக் உபாத்யாவுக்கு எதிராக நெருக்கடி அளிக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இணையதள சர்வர் கோளாறு
நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் கடும் பாதிப்பு!!
புதுடில்லி, அக்.6- இந்தியாவின் மிக பெரிய நிறுவனங்களின் ஒன்றான இண்டிகோவின் மென் பொருளில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் நாடு முழுவதும் அந்நிறுவனத்தின் சேவையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இண்டிகோ விமான சேவை நிறுவனத்தில் செக் இன் மற்றும் முன்பதிவு செய்வதற்கான இணையதள மென்பொருளில் நேற்று (5.10.2024) மதியம் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கு விமான நிலையங்களில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் மென்பொருள் கோளாறால் பெரும் பாதிப்பை சந்தித்தன.
விமான நிலையங்களில் செக் இன் பகுதி மற்றும் தங்கள் உடைமைகளை சோதனைக்கு ஒப்படைக்கும் இடத்திலும் இண்டிகோ பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
விமானங்களை உரிய நேரத்தில் இயக்க இயலாமல் தாமதமான சூழலில் மென் பொருள் கோளாறு ஏற்பட்டதற்கு அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த கோளாறை சரி செய்யும் முயற்சியில் தங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு வருவதாக எக்ஸ் தளத்தில் இண்டிகோ விமான சேவை விளக்கம் அளித்துள்ளது.