உணவுப் பழக்கங்களில் பா.ஜ.க. தலையிட உரிமையில்லை!
நாகாலாந்து பா.ஜ.க. கடும் எதிர்ப்பு
கோகிமா, செப்.20 பசுவை தேசிய விலங்காகவும், தாய்க்கு நிகரான மரியாதை தந்து பசு வதையை தடைசெய்ய ஹிந்துத்துவ அமைப்புகள் நடத்தும் யாத்திரைக்கு நாகாலாந்து பா.ஜ.க. கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
பசுமாட்டை தேசிய விலங்காக அறிவிக்க பா.ஜ.க. மற்றும் ஹிந்துத்துவ அமைப்புகள் நாடு முழுவதும் நடத்த இருக்கும் ‘‘கவு துவஜி ஸ்தாபனா பாரத்’’ என்ற யாத்திரைக்கு எதிராக நாகாலாந்து பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாகாலாந்து மாநில பாஜக தலைவர் பெஞ்சமின் யெப்தோமி. பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வலியுறுத்தி நடக்கும் ‘‘கவு துவஜி ஸ்தாபனா பாரத” யாத்திரைக்கு எதிராக அவர் விடுத்த அறிக்கைக்கு நாகாலாந்து பா.ஜ.க. முழு ஆதரவை அளித்துள்ளது.
பசுவை தேசிய விலங்காகவும் தாயாக வும் அறிவிக்கவும், பசு வதையை தடை செய்யவும் வலியுறுத்தி ஹிந்துத்துவ அமைப்பினர் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். இந்த யாத்திரையின் துவக்கம் நாகாலாந்தில் நடக்க உள்ளது. இதற்கு நாகாலாந்து பா.ஜ.க. கடுமையான எதிர்ப்பைத் தெரி வித்துள்ளது. இந்த யாத்திரை எங்களின் (நாகாக்களின்) கலாச்சாரம் மற்றும் உணவுப் பழக்கங்களில் நேரடியாக தலையிடுகிறது. நாகா வழக்கத்தில், நமது தாய்மார்களை ஒரு விலங்குடன் ஒப்பிடுவதா? குடும்பத்திலும், சமூகத்திலும் தாயை நங்கள் மிகவும் உயர்வான இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்; அப்படி இருக்க தாயை கால்நடைகளோடு ஒப்பிடுவது மிகவும் அவமானகரமானதும் அவமரியாதையானதுமாகும். இது ஒட்டுமொத்த பெண் இனத்தை இழிவு படுத்துவதே!
நாகா மக்களின் பாரம்பரிய உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க முயற்சிப்பது சர்வாதிகாரமானது மட்டுமல்லாமல், நமது கலாச்சார பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறைக்கும் அவமரியாதையானது. நாகா மக்களின் செழுமையான பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்களை வலுக்கட்டாயமாக மாற்றுவதோ, ஹிந்து கலாச்சாரம் என்ற பெயரில் ஏதோ ஒன்றை எங்கள் தலை யில் திணிக்க முயல்வதோ நாங்கள் தலை முறையாக போற்றி வந்த அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இனிமேல் நாங்கள் சாப்பிடும் உணவில் இதைப் பயன்படுத்து–, இதைப் பயன்படுத்தாதே என்று கட்டுப்பாடுகளை, ஏற்படுத்துவார்கள்; நாளை நெய்யைப் பயன்படுத்தாதே, கொழுப்பை பயன்படுத்தாதே என்று கூட சொல்லுவார்களோ! இது தனிப்பட்ட மற்றும் கலாச்சார சுதந்திரங்களை நேரடி யாக மீறுவதாகும். எனவே, இந்த யாத்திரை, இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் பன்னாட்டளவில் அதற்குள்ள மரியாதை மற்றும் சகிப்புத்தன்மையின் உணர்வைக் கடுமையாக குறைக்கிறது.
இத்தகைய பிளவுபடுத்தும் திட்டங்க ளுக்குஎதிராக உறுதியாக நிற்கவும், நாகாலாந்தின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் பா.ஜ.க. நாகாலாந்து ஒன்றிய – மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. நாகாலாந்தில் சமூக நல்லிணக்கத்தின் சமநிலையைக் குலைக்கும் நோக்கம் கொண்ட எந்தவொரு திட்டமும் அல்லது கொள்கையும், நாகாக்க ளுக்கும், தலைமுறைகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் பிற சமூகங்கள், மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே வெறுப்பு மற்றும் போராட்டத்தை வளர்ப்பதற்கு முன்பே அதன் பாதையில் நிறுத்தப்பட வேண்டும்.
தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது!
எங்களது வாழ்க்கை முறையை மாற்றும் இத்தகைய முயற்சிகள் அமைதியான மற்றும் ஒற்றுமையான முறையில் எதிர்க்கப்படுவதை உறுதி செய்ய விழிப்புடன் இருக்குமாறு சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் நாங்கள் வேண்டுகிறோம். எங்கள் முதன்மையான கவலை எங்கள் மக்களின் நலனாகும், மேலும் நாகாலாந்தின் சமூக அமைப்பு தொடர்ந்து சீராகவும், உற்சாகமாகவும் இருப்பதை உறுதி செய்வதோடு, நாகா மக்களின் கலாச்சார உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நிலைநிறுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை நாகாலாந்து சமூகம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது’’ என்று அம்மாநில பா.ஜ.க. தலைவர் கூறியுள்ளார்.