பாணன்
“பெரியார் – புது உலகின் தொலை நோக்காளர். தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ். சமுக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூட நம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி.”
இத்தகைய குண நலன்கள் படைத்த பெரியார் அவர்களின் அடிப்படையான இயல்பு என்பது பழைமையை முற்றிலுமாக வெறுத்ததும் புதுமையை ஒரு சிறுகுழந்தையின் உற்சாகத்துடன் வரவேற்றதும் ஆகும்.
சமூக வாழ்க்கையிலும் அறிவியல் தொடர்பான செய்திகளிலும் புதிய கருத்துகள் எங்கெல்லாம் தோன்றினவோ அவற்றை மிகவும் உற்சாகத்துடன் வரவேற்று சிறப்பு செய்தவர் பெரியார் ஆவார். இதை அவர் தமது இளமைக் காலத்தில் மட்டுமின்றி இறுதிக்காலம் வரை அதே உற்சாகத்துடன், வேகத்துடன் செய்து வந்தார் என்பதே அவருடைய சிறப்பு ஆகும்.
மருத்துவம் என்று வந்தபொழுது மருத்துவர்களின் சொல்படியே தம்முடைய வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதற்கு மிகவும் முயற்சி செய்தார்.
மருத்துவத்தை குறிப்பாக ஆங்கில வழி மருத்துவத்தை மிகவும் வரவேற்று உயர்த்திப் பேசிய தலைவர் அவரே. இதற்கு ஒரே காரணம் ஆங்கில வழி மருத்துவம் அறிவியல் வழி அமைந்தது என்பதே ஆகும்.
இத்தகைய அறிவியல் நோக்கு அவருக்கு இளமை தொட்டே இருந்து வந்திருக்கிறது. 1938ஆம் ஆண்டு’ இனிவரும் உலகம்’ என்னும் தலைப்பில் பெரியார் நூல் எழுதி வெளியிட்டார் அதில் இன்று கண்கூடான நடைமுறை உண்மை ஆகிவிட்ட ‘சோதனைக் குழாய் குழந்தை’ உள்ளிட்ட எண்ணற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் உண்டாகும் என்னும் தமது தொலைநோக்குச் சிந்தனைகளை வெளியிட்டார்.
அதுபோன்றே முதன் முதலாக குடும்பக் கட்டுப்பாடு பற்றியும் அதன் தேவைப் பற்றியும் எழுதிய தலைவர் தந்தை பெரியார் அவர்களே.
பெரியார் மற்றும் இவர் குழுவினர் மலேயா நாட்டிலிருந்து கப்பலில் 1930 – சனவரி 16 தமிழ் நாடு திரும்பினர். சில மாதங்களில், ‘குடும்பக் கட்டுப்பாடு’ பற்றிப் பெரியார் நூல் வெளியிட்டார். குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முறைக்குக் கருத்துப் பரப்பல் செய்தார். அந்நாளில் இந்திய அரசு குழந்தைக் கட்டுப்பாடு திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு முன்பே, அதன் கட்டாயத் தேவையை இந்தியாவிலேயே முதன் முதல் வலியுறுத்திய பகுத்தறிவுச் சிற்பியும் நூல் எழுதிய ஆசிரியரும் பெரியார் ஒருவர் மட்டுமே!
அவருடைய இத்தகைய அறிவியல் நோக்கும் உற்சாகமும், புதுமையை வரவேற்கும் மனப் பாங்கும் வாழ் நாள் முழுவதும் தொடர்ந்து இருந்து வந்தது
பெரியார் தம்முடைய இறுதி நாள் வரை புதுமைக்கான உற்சாகத்தை கைவிடவில்லை. 19.12.1973ஆம் ஆண்டு சென்னை தியாகராயர் நகரில் நடத்திய இறுதிப் பேருரையில் நாம் இதனைக் காணலாம்.
“ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 500 ஆண்டுகள் இருக்கலாம். இப்போது சராசரி 52 வயதுதான். வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம். அவன் வருவதற்கு முன்பு இங்கு சராசரி வயது 10 கூட இல்லை; 7 வயதுதான்.
அவன் வந்த பிறகுதான் வைத்தியம், சுகாதாரம் எல்லாம்.
எல்லாம் நமக்கு அவன் ஏற்றிய பிறகுதானே இவ்வளவு உயர்ந்தது. ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயது சராசரியாக வாழுகிறான். நாமும் இன்னும் 10 ஆண்டில் 75 வயதுவரை வாழ்வோம். இப்படி நாளாக, நாளாக 500 வயதுவரை வாழ வேண்டி வரும்! இருப்பது கஷ்டமல்ல; சாவதுதான் கஷ்டம்!
‘தோழர்களே 1952இல் நமது சராசரி வயது 25. இன்று சராசரி வயது 52, இடையிலே 20 ஆண்டுகளில் 30 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் நமது ஆயுள் உயர்ந்துவிட்டது. இன்னும் 2000 ஆண்டு பிறக்கும்போது நாம் 75 ஆண்டு இருப்போம், வெள்ளைக்காரன் நூறு ஆண்டிற்கு மேல் இருப்பான்.
அந்த அளவு மருந்தும் வந்துவிட்டது. ஏதோ ஒன்று இரண்டுக்கு இல்லை; அதுவும் ஆராய்ந்து கொண்டிருக்கிறான். எனவே, நல்ல வளர்ச்சியான காலத்திலே இருக்கிறோம். நான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு சொன்னேன். பாருங்கள், பத்திரிகைகளிலே விந்துகளைப் பேங்க்கில் சேர்த்து வைத்து, பத்து ஆண்டுகளுக்குப்பிறகு குழந்தைகளை உண்டாக்கலாம் என்று வந்திருக்கிறது. கோழிக்குஞ்சைப் பொரிக்க வைப்பதுபோல் பொரிக்க வைத்துவிடலாம். பெண்களுடைய இந்திரியம் ஒரு டப்பியிலே ஆண்களுடைய இந்திரியம் ஒரு டப்பியிலே- பேங்கு என்று அதற்குப் பெயர். அதிலே சேர்த்து வைத்துக்கொள்ளலாம். என்றைக்கு குழந்தை வேண்டுமோ, அன்றைக்கு குழந்தையை உண்டாக்கிக் கொள்ளலாம். ‘ பியா பியா’ என்று கத்திக் கொண்டு குழந்தை வரும். இதையெல்லாம் பொய் என்று சொல்லமுடியாது.”
என்ன உற்சாகமான உரை பாருங்கள்! கேட்பவர் உள்ளத்திலும் நம்பிக்கையை விதைக்கின்ற பேச்சு ஆகும். அவர் இந்த உரையினை தமது சாவின் விளிம்பில் நின்று கொண்டு பேசினார் என்பதை நினைக்கும் பொழுது அதனுடைய வீச்சு நமக்கு எளிதில் புரியும். தாம் இறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு வரை மிகவும் உற்சாகமும் புதுமையில் நம்பிக்கையுடனும் அறிவியலில் ஆழ்ந்த பற்றுடனும் அவர் பேசியது வியப்பளிக்கக் கூடியதாகும். இதற்கு முன்னரே பெரியார் அவர்களுக்கு பல முறை பலவித நோய்கள் ஏற்பட்டன, ஒவ்வொரு முறையும் அவர் தம்முடைய மன வலிமையினாலும் அறிவியல் சார்ந்த ஆங்கில மருத்துவ முறையினாலும் சந்தித்து வெற்றி கொண்டார்.
ஒரு சமயம் அவருக்கு நாவில் தீராதப் புண் உண்டாயிற்று, அது புற்று நோயாக இருக்கக்கூடுமோ என்ற அய்யம் ஏற்பட்டது. நாக்காயிற்றே அறுவைச் சிகிச்சை செய்தால் பேசும் திறன் எவ்வாறு பாதிக்கப்படுமோ என்று மற்றவர்களெல்லாம் அஞ்சிக் கொண்டிருந்தப் போது பெரியார் அவர்கள் தம்முடைய மருத்துவரை நோக்கி கூறிய செய்தி என்ன தெரியுமா ?
“அய்யா, என்னுடைய நாவில் உள்ள புண்ணை எப்படியாவது ஆற்றிவிடுங்கள். புற்று நோய் என்று நீங்கள் கருதினால் அறுவைசிகிச்சை வேண்டுமானாலும் செய்துக் கொள்ளுங்கள்.
பேச்சு சிறிது பாதித்தாலும் பரவாயில்லை. ஆனால் நான் உயிருடன் இருப்பது அவசியமாகும்.. இதை நான் எனக்காக மட்டும் சொல்லவில்லை. பேசும் திறன் முற்றிலும் போய்விட்டாலோ, அல்லது நோய் பரவி நான் இறந்துவிட்டாலோ, மற்றவர்கள் இராமசாமி நாயக்கர் தன்னுடைய வாழ்நாள் எல்லாம் கடவுளைத் திட்டிக் கொண்டே இருந்தார். அதனால் தான் அவருக்கு அவருடைய நாக்கில் புற்று நோய் ஏற்பட்டது. திட்டிய நாக்கினை கடவுள் தண்டித்து விட்டார் என்று கூறுவார்கள். அவ்வாறு நடந்துவிட்டால் அதற்குப் பிறகு இந்த நாட்டில் கடவுளை திட்டவோ அல்லது பகுத்தறிவு பிரச்சாரம் செய்வதற்கோ ஒரு பயலும் முன் வரமாட்டான். எனவே இந்த சமயத்தில் மருத்துவ முறையின் மூலமாக நான் உடல் நலம் அடைவது மிகவும் முக்கியமாகும்.”
நெகிழவைக்கும் இந்த வேண்டுகோளைக் கேட்ட மருத்துவரும் துணிவுடன் அறுவைச் சிகிச்சை செய்ய பெரியாரும் தன்னுடைய நாக்குடன் உயிர் பிழைத்தார். அதற்குப் பிறகு நெடுங்காலம் வாழ்ந்து வந்து பகுத்தறிவினைப் பரப்பும் பணியினை தொடர்ந்து செய்து வந்தார்.