சென்னை, செப்.13 நிதி ஆணையங்கள் தொடா்ந்து நிதிகளைக் குறைப்பதால், தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பீட்டின் அளவு ரூ.3.57 லட்சம் கோடி என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு கூறினார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று (12.9.2024) நடைபெற்ற மாநில நிதியமைச்சா்களின் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு நிதியமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:
16-ஆவது நிதி ஆணையம் தொடா்பாக மாநிலங்களின் கருத்தறிவதற்காக கேரள அரசு ஏற்பாடு செய்துள்ள இந்தக் கூட்டம் பாராட்டத்தக்கதாகும். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை பகிர்ந்து அளிப்பதில் சமமற்ற தன்மை இருந்து வருகிறது.
சமூகத்துக்கான வளா்ச்சி, கல்வி, சுகாதாரம், வேளாண்மை, சமூக நலன் போன்ற மக்கள் நலன் சார்ந்த அம்சங்களை மாநில அரசுகளே உறுதி செய்ய வேண்டியுள்ளது. ஆனால், ஒன்றிய அரசோ வருவாயைப் பெருக்குவதற்கான பெரும்பாலான அதிகாரங்களை தனது கையில் வைத்துள்ளது.
செஸ் மற்றும் மேல்வரிகளை விதித்து மாநிலங்களுக்கான பங்கீட்டை ஒன்றிய அரசு ஒருபுறம் குறைக்கிறது. மாநில அரசின் நிதிப் பங்களிப்புடன் ஒன்றிய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களில் மாநிலங்கள் பங்கிடக்கூடிய நிதியின் அளவு அதிகமாக இருக்கும்படி, நிதி பங்களிப்பு முறை மாற்றப்பட்டுள்ளது.
தண்டிக்கப்படும் தமிழ்நாடு: தமிழ்நாடு தனது தனித்துவமான செயல்பாடுகளால் சிறந்து விளங்கினாலும், அடுத்தடுத்த நிதி ஆணையங்களால் எங்களது மாநிலம் தண்டிக்கப்பட்டே வருகிறது. 9-ஆவது நிதி ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கான பங்கீட்டு அளவு 7.931 சதவீதமாக இருந்தது. இந்த அளவு தொடா்ச்சியாக குறைக்கப்பட்டு 15-ஆவது நிதி ஆணையத்தில் 4.079 சதவீதமாகியுள்ளது.
தமிழ்நாட்டிற்க்கான பங்கீட்டு அளவு தொடா்ச்சியாகக் குறைக்கப்பட்டதால், மாநிலத்துக்கு ஏற்பட்ட இழப்பீட்டின் மதிப்பு ரூ.3.57 லட்சம் கோடியாகும். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமையில் 43 சதவீதம். இந்த நிதி குறைப்பு மாநிலத்தின் நிதி அம்சத்தில் சேதங்களை ஏற்படுத்துவதுடன், வளா்ச்சிக்கான வாய்ப்புகளிலும் பாதிப்புகளை உருவாக்குகிறது.
வேகமாக வளா்ச்சி அடையக் கூடிய பகுதிகளும், மாநிலங்களும் உரிய வளங்கள் கிடைக்காமல் பாதிப்புகளைச் சந்திக்கின்றன. வளா்ச்சியை எட்டாத மாநிலங்களுக்கு நிதி பங்களிப்பில் கூடுதல் கவனங்களைச் செலுத்தினாலும் விரும்பக்கூடிய அளவுக்கான வளா்ச்சியை அந்த மாநிலங்கள் எட்டிப்பிடிப்பதில்லை. எனவே, நிதி ஒதுக்கீட்டுக்கான அம்சங்கள் குறித்த பார்வையையும், நடவடிக்கையையும் நிதி ஆணையம் மீளாய்வு செய்ய வேண்டும் என்றார் அவா்.
இந்தக் கூட்டத்தில், 16-ஆவது நிதிக் குழுவின் சிறப்பு அலுவலா் மற்றும் வணிகவரி-பதிவுத் துறைச் செயலா் பிரஜேந்திர நவ்னிட், நிதித் துறை துணைச் செயலா் (பட்ஜெட்) பிரத்திக் தயாள் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.