சண்டிகர், செப். 13- அரியானா சட்டமன்றத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 89 இடங்களில் களத்தில் உள்ளது. ஒரு தொகுதியை மட்டும் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கியுள்ளது. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
அரியானாவில் அக்டோபா் 5-ஆம் தேதி சட்டமன்றத் தோ்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும் முனைப்புடன் உள்ள பாஜக, மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் வேட்பாளா்களை களமிறக்கியுள்ளது. முதலமைச்சர் நாயப் சிங் சைனி, லாட்வா தொகுதியில் போட்டியிடுகிறார்.
முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், 89 தொகுதிகளில் களம்காண்கிறது. ஏற்கெனவே இரண்டு கட்ட பட்டியல் களை வெளியிட்ட காங்கிரஸ், 40 வேட்பா ளா்களுடன் மூன்றாவது – இறுதிகட்ட பட்டியலை புதன்கிழமை இரவில் வெளியிட்டது. காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்எல்ஏக்கள் 28 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் காங்கிரஸில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், ஜுலானா தொகுதியில் களத்தில் உள்ளார். மேனாள் முதலமைச்ச பூபிந்தா் சிங் ஹூடா, கா்ஹி சம்பலா-கிலோய் தொகுதியில் போட்டியிடுகிறார். nதேசிய அளவில் ‘இண்டி’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸும் ஆம் ஆத்மியும் அரியானாவில் கூட்டணியாக போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, ஆம் ஆத்மி தனித்து களமிறங்க முடிவு செய்தது. பல்வேறு கட்டங்களாக 90 தொகுதிகளுக்கும் அக்கட்சி வேட் பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த 2019 அரியானா பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி 46 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் ஓரிடத்தில் கூட அக்கட்சி வெற்றிபெறவில்லை.
அரியானா தோ்தலில் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி – ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணியும், அபய் சிங் சவுதாலா தலைமையிலான இந்திய தேசிய லோக் தளம் – பகுஜன் சமாஜ் கூட்டணியும் களத்தில் உள்ளன. இதனால் பலமுனைப் போட்டி உருவாகியுள்ளது.
அரியானாவில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை வெள்ளிக்கிழமை (செப்.13) நடைபெறவுள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற செப்.16 கடைசி நாளாகும். இதைத் தொடா்ந்து, இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியாகும்.
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து உள்ளதால், அனைத்து தொகுதிகளிலும் தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது. இத்தோ்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபா் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.