திராவிடர் கழகம் என்பது ஏதோ பத்தோடு பதினொன்று என்று யாரும் அலட்சியப்படுத்தப்படவே முடியாத பகுத்தறிவு நெறியியக்கம்.
இயக்கத்தினர் குடும்ப – கொள்கை உறவைச் சேர்ந்த இணக்கமானவர்கள்.
பெரியார் கொள்கை என்பது ஒரு வாழ்க்கை நெறி!
கொள்கை என்பது வெறும் கடவுள் மறுப்பல்ல – ஆனால் ‘கருஞ்சட்டையினர் என்றால், பெரியார் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றால் சாமியில்லை என்பவர்கள்’ என்ற மேலோட்டமான ஒரு பிரச்சாரம்!
ஏடுகளும் – பெரும்பாலும் பார்ப்பனீயம் – அதன் சாயலாக இருப்பதால் இவ்வாறு வலுவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
உண்மையைச் சொல்லப் போனால் பகுத்தறிவு நெறி என்பதன் வேரில் ஒழுக்கம் என்ற பலா பழுத்துத் தொங்குகிறது.
பக்தியின் பெயரால் எந்த ஒழுக்கக் கேட்டையும் செய்யலாம் – காரணம் அதற்குப் பிராயச்சித்தம் உண்டு.
12 ஆண்டுகள் தொடர்ந்து பாவங்களைச் செய்து கொண்டே இருக்கலாம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப கோணம் மகாமகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டால் ஒட்டு மொத்தமாக பாவங்கள் பறந்தே போவ தோடு மட்டுமல்ல – புண்ணியமும் மூட்டை மூட்டையாக வந்து குவியும்! என்னே ஒழுக்கக் கேடு!
புத்தம் சரணம் கச்சாமி!
தம்மம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி!
இம்மூன்றும் புத்த மார்க்கத்துக்கானது.
இதற்குத் தந்தை பெரியார் கொடுத்த விளக்கம் தனித் தன்மையானது.
‘‘பவுத்தம் (தலைவன்), தம்மம் (கொள்கை), சங்கம் (ஸ்தாபனம்) ஆகிய மூன்றுக்கும் வணக்கம் செலுத்துகிறேன் என்பதாகும். இது பவுத்தர்களுக்கு மாத்திரமல்லாமல் மற்றும் உலகில் உள்ள யோக்கியமான எந்த ஸ்தாபனத்திலிருக்கும் யாருக்குமே உண்மையான இன்றியமையாத கடமையாகும்’’ என்று விளக்கம் தந்தார் தந்தை பெரியார் (15.5.1957 அன்று சென்னை எழும்பூர் மகாபோதி சங்கத்தில் தந்தை பெரியார் தலைமையேற்று ஆற்றிய உரையிலிருந்து)
திராவிடர் கழகத் தலைமை என்பது – ஏேதா ஒரு கட்சிக்கான தலைவர் கிடையாது.
அதனால்தான் கழகத் தோழர்கள் தலைவரை அழைக்கும்போது ‘எங்கள் குடும்பத் தலைவர் ஆசிரியர் அவர்களே!’ என்றே விளிப்பார்கள்!
இது தந்தை பெரியார் காலத்திலிருந்து, அன்னை மணியம்மையாரைத் தொடர்ந்து, தலைவர் ஆசிரியர் காலத்திலும் பயணித்துக் கொண்டே இருக்கிறது.
தந்தை பெரியார் ஒன்றைச் சொல்லுவார். ஓர் ஊர் கூட்டம் முடிந்தவுடனேயே இரவோடு இரவாக அடுத்த ஊர் நிகழ்ச்சிக்கு ‘வேன்’ மூலம் அந்தக் கரடு முரடான சாலைகளில் பயணத்தை மேற்கொண்டு அடுத்தக் கூட்டம் நடக்கும் ஊருக்குச் செல்வார்கள்.
அதற்குத் தந்தை பெரியார் கூறும் காரணங்கள் இரண்டு.
(1) நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் தோழர்களுக்கு ஒரு மன நிறைவு
(2) நம்மைப் பார்ப்பதற்கு வெளியூர்களிலிருந்தெல்லாம் குடும்பம் குடும்பமாக தோழர்கள் வருவார்கள். இயக்கச் செய்திகள், நடப்புகள், குடும்ப செய்திகள் உட்பட அனைத்தையும் தந்தை பெரியார் அவர்களிடத்தில் கூறி அய்யாவின் கருத்தைக் கேட்பார்கள்.
அது வீட்டுத் திருமணமாக இருக்கலாம், சொந்தத்தில் வீடு கட்டுவதாக இருக்கலாம். நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் பற்றியதாகவும் இருக்கலாம். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமானதாகவும் இருக்கலாம்.
வீட்டில் செய்த பலகாரங்களையும் கொண்டு வந்து கொடுப்பார்கள். அவர்களுக்கு முன் அதில் ஒன்றை எடுத்துச் சாப்பிடுவார் – அளித்தவர்களின் திருப்திக்காக! அன்னை மணியம்மையார் சில சமயங்களில் தடுப்பார்கள் – அய்யா
உடல் நலங் கருதி!
குடும்பத் தலைவர் என்பதன் பொருள் இப்பொழுது புரிகிறதா?
இதை எழுதுவதற்குக் காரணம் அண்மையில் நடைபெற்ற இரு நிகழ்வுகள்.
ஒன்று – கோவையில் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடந்த ஒரு வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா.
மணமகள் தமிழ் ஓவியா (இந்தியாவில் சட்டம் படித்து – அதன் மேற்படிப்பை நெதர்லாந்தில் முடித்து – சென்னையில் ஒரு முக்கிய நிறுவனத்தில் உயர் அதிகாரி) – ராஜாதித்தியன் (அவரும் உயர் பணியில் உள்ளார்) வாழ்க்கை இணை நல ஒப்பந்தம் 14.7.2024 அன்று கோவையில் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மணமகளின் பெற்றோர் – தங்கவேலு – இந்துமதியின் – (தமிழ்மதி) வாழ்க்கை இணை நல ஒப்பந்தமும் திருச்சியில் ஆசிரியர் தலைமையில்தான் நடந்தது (1994).
அவர்களின் புதிய இல்லத் திறப்பு விழாவும் கோவை யில் தலைவர் ஆசிரியர் தலைமையில் தான் நிகழ்ந்தது (2006).
இப்பொழுது அவர்களின் மகள் தமிழ் ஓவியா வாழ்க்கை இணை நலமும் ஆசிரியர் தலைமையில்தான் நடந்திருக்கிறது. இன்னொரு மகள் லண்டனில் (UK) மேற்படிப்பு படித்துக் கொண்டே பணியாற்றியும் வருகிறார்.
மணமகளின் தந்தை தங்கவேலு 1996இல் குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்டவர். (மணமகள் ஓவியா வல்லம் பழகுமுகாம் தயாரிப்பு)
இவரும், இவர் வாழ்விணையரும் சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்ட பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சியில் பயின்றவர்கள். மனங்கள் இணைந்து மணமக்களாகினர்.
இவர்கள் இருவரும் உயர் பதவிகளில் இருக்கின்றனர். இவர்களின் மகள் தமிழ் ஓவியா வாழ்க்கை இணை நலம் கோவையில் தந்தை பெரியாரின் கொள்கைச் சங்கமமாக குளிர்ந்து மகிழ்ந்ததை இப்பொழுது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களி லிருந்தும் வந்திருந்தனர். வந்தவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்லர். காவல்துறை அய்.ஜி.க்கள் (பெண்கள்), வணிக வரித் துறை, கூட்டுறவுத் துறை, வருமானவரித்துறை, கல்வித் துறை என்று பல்வேறு துறைகளிலும் உயர் பதவியில் ஒளிரும் மாமணிகள்.
திருமணம் முடிந்த நிலையில் தலைவர் ஆசிரியரைச் சூழ்ந்து கொண்டு ஒவ்வொருவராகத் தங்களை அறிமுகம் செய்து கொண்டு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஒவ்வொருவரும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்ச்சித் ததும்ப சொன்ன அந்த ஒரே வார்த்தைகள் தான் அதி முக்கியமானது!
‘அய்யா நாங்கள் எல்லாம் பெரியார் திடலில் வளர்ந்த பிள்ளைகள். பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி நிலையத்தில் படித்து –இன்று இந்த உயர் பதவியில் இருக்கிறோமய்யா – இந்த வாழ்வெல்லாம் தந்தை பெரியாரால் கிடைத்தது. தந்தை பெரியாருக்குப் பின், அவர்களின் அடிச்சுவட்டில், தாங்கள் ஆக்கரீதியாக உருவாக்கிய பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யம் தந்தது என்பதை என்றென்றைக்கும் எங்களால் மறக்க முடியாத நன்றிக்குரியது’ என்று நா தழுதழுக்க ஆனந்தக் கண்ணீர் மல்க சொன்னதை வார்த்தைகளால் வடித்திடத்தான் முடியுமா?
பக்கத்தில் இருந்த அமைச்சர் மாண்புமிகு பெரிய கருப்பன் அவர்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டார்!
பெரியார் இயக்கம் என்பது வெறும் கருஞ்சட்டைப் போட்டவர்களின் அமைப்பு மட்டும் தான் என்று நினைக்கின்றவர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ளட்டும்.
இத்தகு கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரியாத ஆணிவேராகப் பதிந்திருக்கும் (Invisible) இருபால் தோழர்களின் பலம் – வேறு எந்த இயக்கத்திற்கு உண்டு என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
இரண்டாவது நிகழ்ச்சி ஒன்று கடந்த 9ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்த கொள்கை மணம் வீசிய குடும்பங்களின் சங்கமம்!
சென்னை பெரியார் திடலில் கல்லூரிப் படிப்பை முடித்த மாணவராக அடி எடுத்து வைத்து ‘விடுதலைப் பணிமனையிலும், தலைவர் ஆசிரியரின் சுற்றுப் பயணத்திலும் உதவியாளராகப் பணியாற்றிய வடமணப்பாக்கம் (செய்யாறு) தோழர் வி. வெங்கட்ராமன் எம்.ஏ., பி.எட்.,
சில ஆண்டுகள் பணியாற்றி, அதன்பின்னர் அரசுத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர் தோழர் வெங்கட்ராமன்; தோழர் சிறீதரும் அவருடன் பெரியார் திடலுக்கு வந்தவர்! திடலிலேயே ‘விடுதலை’யிலேயே அவர் பயணம் தொடர்கிறது.
தோழர் வெங்கட்ராமன் வாழ்விணையர் தமிழ்மொழி மருந்தியல் துறையில் (Pharmacy) பதிவாளர் என்ற உயரத்திற்குச் சென்றவர்.
இரு மனம் கலந்த ஜாதி மறுப்புக் கொள்கை வாழ்விணையர். இவர்களின் வாழ்க்கை இணை நலமும் தலைவர் ஆசிரியர் தலைமையில் தான் நிகழ்ந்தது.
இரு செல்வங்கள் – கல்வி வளத்துடன் ஒளி வீசுகிறார்கள் – இவர்களின் பெற்றோர்களும் பகுத்தறிவு அரிமாக்கள்!
வடமணப்பாக்கம், செய்யாறு பகுதிகள் இயக்க வரலாற்றில் முத்திரை பதித்த ஊர்கள்! செய்யாறு பொங்கல் விழா பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டில் கழகம் நடத்தும் ஊர்வலங்களில் எல்லாம் வடமணப்பாக்கம் தோழர்களின் பங்களிப்பு உன்னதமானது. (தீ மிதிப்பு, அலகு குத்தி கார் இழுப்பு, பறவைக் காவடி – இன்னோரன்ன…) செய் யாறில் கழக மூவேந்தர்கள் வேல் – சோமசுந்தரம், தாடி அரு ணாசலம், டி.பி. திருச்சிற்றம்பலம் ஆகியோர். அவர்களின் கொள்கை வாரிசுகள் மூவர் – முறையே பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன், அ. இளங்கோ, தி. காமராஜர் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமது 60ஆம் ஆண்டையொட்டி, தாம் பணி தொடங்கிய பெரியார் திடலில் பணிபுரிவோர்க்கு மதிய விருந்தளித்து மகிழ வேண்டும் என்று முடிவு செய்த தோழர் வெங்கட்ராமனின் நன்றி மணம் வீசும் பெரு உள்ளத்தை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.
வெங்கட்ராமனும், அவர் வாழ்விணையர் தமிழ்மொழியும் போட்டிப் போட்டுக் கொண்டு உற்சாகப் பெருக்கில் ஓடியாடி உபசரித்த காட்சி இருக்கிறதே – அது மிக மிக உன்னதமானது.
இருவரும் என்ன பேசினார்கள்? ‘‘நாங்கள் இந்தக் கொள்கையால் வளர்ந்தோம் – இந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்டோம் – இந்த இயக்கத்தால் வளமை அடைந்தோம் – வாழ்கிறோம் மகிழ்ச்சி பொங்க எங்கள் பிள்ளைகளும் சிறப்பாக ஒளி வீசுகிறார்கள்!்று சொன்னதெல்லாம் வெறுமைச் சொற்கள் அல்ல. உள்ளத்தின் ஆணி வேரிலிருந்து நன்றி ஊற்றெடுத்து வெளிக் கிளம்பும் ஒளிக் கீற்றுகள்!
இவர்களின் இரு பிள்ளைகளும் வல்லம் குழந்தைகள் பழகு முகாமிலும், குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையிலும் தயாரிக்கப்பட்ட கொள்கை ஆயுதங்கள்.
தமது 60ஆம் ஆண்டையொட்டி ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.60 ஆயிரம் நன்கொடை அளித்தனர். ‘குரு காணிக்கை’ என்று சொல்வார்களே அதுதான் நினைவிற்கு வந்தது.
விழாவுக்குத் தலைமை ஏற்ற தலைவர் ஆசிரியர் உதிர்த்த சொற்கள் – இந்த இயக்கத்திற்கே உரித்தான உளமார்ந்த தனி முத்திரைகள்.
‘திராவிடர் கழக உறவு என்பது கொள்கை சார் குடும்ப உறவு. கழகத் தோழர்களின் திண்ைணயும் சமையலறையும் எங்களுக்கு உரிமையானது!’ என்ற இரு சொற்களும் ஈடு இணையற்ற இலட்சியப் பொன் பெட்டகத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய வைரக் கற்களாகும்.
இந்த இயக்கம் திராவிடர் கழகம் எத்தகைய திட்பமும், தீர்க்கமும், கொள்கையும் தேனினும் இனிய உறவும் கொண்டுப் பின்னிப் பிணைந்தவை. அதில் நம்மை நாம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறோம் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணும்போது – நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாம் அல்லவா!
இந்தக் கொள்கை எண்ணவோட்டம் உலகில் எங்கிருந்தாலும் ஆங்கே அறிவுலக ஆசான் தந்தை பெரியார் உறைகிறார் என்று பொருள்!
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!