மோடியால் சீனாவை சரியாக கையாள முடியவில்லை
அமெரிக்காவில் ராகுல் கடும் குற்றச்சாட்டு
வாசிங்டன், செப்.12- டில்லி அளவிற்கு லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், மோடியால் சீனாவை சரியாக கையாள முடியவில்லை என்றும் அமெரிக்காவில் ராகுல் கடும் குற்றச்சாட்டு வைத்தார்.
அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, வாசிங்டனில் தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் பேசுகையில், ‘டில்லியின் பரப்பளவு அளவிலான நிலம் சீனப்படைகளால் லடாக்கில் ஆக்கிரமித்துள்ளன.
இதனை ஒரு பேரழிவு என்று நினைக்கிறேன். ஊடகங்கள் அதைப் பற்றி எழுத விரும்புவதில்லை. இதுபோன்று அமெரிக்காவில் நடந்திருந்தால், அமெரிக்கா இவ்விடயத்தை எப்படி எதிர்கொள்ளும்? சீனா 4,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. சீனா விவகாரத்தை சரியாக கையாள்வதாக தெரிய வில்லை.
பிரதமர் மோடியால் சீனாவின் அத்துமீறல் செயல்களை சரியாக கையாள முடியவில்லை. இந்தியாவில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பது இரு நாடுகளையும் (இந்தியா – பாகிஸ்தான்) பின்னுக்குத் தள்ளுகிறது.
பாகிஸ்தான் பின்னால் இருந்து தாக்குகிறது; இவ்வாறு தாக்குவதை ஏற்க முடியாது. பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் வரை, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. வங்கதேச மக்களுடன் எங்களுக்கு நீண்டகால உறவு உள்ளது. வங்கதேசத்தை உருவாக்குவதில் எனது பாட்டி (இந்திரா காந்தி) சிறப்பு கவனம் செலுத்தினார். வங்கதேசத்தில் உள்ள தீவிரவாதிகளால், இந்தியாவிற்கு சிக்கல் இருப்பதாக கருதுகிறேன். வங்கதேசத்தில் நிலைமை சீராகும் என்று நம்புகிறேன். என்றார்.