புதுடில்லி, செப்.5 தமிழ் நாட்டில் கீழடி அகழாய்வுகளை முன்னெடுத்த அமர்நாத் ராம கிருஷ்ணா, இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல மூத்த தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
2014ஆம் ஆண்டு கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய் வின் போது, கண்காணிப்பாளராக இருந்தவர் அமர்நாத் கிருஷ்ணா. இந்திய தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்ற மூன்று கட்ட அகழாய்வில், இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகள் இவர் தலைமையில் கீழடியில் நடைபெற்றன.
அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினரே கீழடியில் பண்டைய காலத்தில் நிலவிய நகர நாகரீகத்தை வெளிக்கொணர்ந்தனர்.
தற்போது பதவி உயர்வு செய்யப்பட்டுள்ள அமர்நாத் ராமகிருஷ்ணா, இந்திய தொல்லியல் துறை தலைமை அலுவலகத்தில் இருந்து தனது பணியை மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.