நாட்டின் வளர்ச்சியில் மேலும் பலத்த அடி!
புதுடில்லி, ஆக. 31 – நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 விழுக்காடாக குறைந்துள்ளது.
இது கடந்த நிதியாண்டில் 8.2 விழுக்காடாக இருந்த நிலையில் தற்போது பலத்த அடி வாங்கியுள்ளது.
தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட அறிக்கை யில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, விவசாயத் துறை மோசமான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது.
2023 – 2024 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் காலா ண்டில் 3.7 விழுக்காடாக இருந்த விவசாயத் துறை, தற்போது 2 விழுக்காடு வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி மட்டும் 5 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
நிதி, ரியல் எஸ்டேட், தொழில்முறை சேவைகளின் சேர்க்கப்பட்ட மொத்த மதிப்பின் விரிவாக்கம் கடந்தாண்டின் காலாண்டில் 12.6 விழுக்காடாக இருந்தது. இது தற்போது 7.1 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
2024 – 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிலை யான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 43.64 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது; இது 2023 – 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 40.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதன்மூலம், 6.7 விழுக்காடு வளர்ச்சி விகிதமே பதிவாகியுள்ளது.
மின்சாரம், எரிவாயு, குடி நீர் வழங்கல், பிற பயன்பாட்டு சேவைகள் 3.2 விழுக்காட்டிலிருந்து 10.4 விழுக்காடு உயர்ந்துள்ளது. கட்டுமானப் பிரிவு ஓராண்டிற்கு முன்பு 8.6 விழுக்காட்டிலிருந்து 10.5 விழுக்காடு வளர்ச்சி யடைந்துள்ளது.
அதேநேரம், வர்த்கம், ஓட்டல்கள், போக்கு வரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் ஓராண்டிற்கு முன்பு 9.7 விழுக்காட்டிலிருந்து 5.7 விழுக்காடாகக் குறைந்துள்ளது.