குடியேற்றம், ஆக.29- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் முன்னிட்டு மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா 25-08-2024 அன்று குடியேற்றம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு தலைமை உரையாற்றினார். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் ஆசிரியர் பி.தனபால் அனைவரையும் வரவேற்றார். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் க.சையத் அலீம் இணைப்புரை வழங்கினார். வேலூர் மாவட்ட கழக செயலாளர் உ.விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினர் கு.இளங்கோவன், நெ.கி.சுப்பிரமணி, வேலூர் மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் தமிழ் தரணி, வேலூர் மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர்
மு.சீனிவாசன், நகர கழக அமைப்பாளர் வி.மோகன், நகர கழக க.பரமசிவம், பகுத்தறிவாளர் கழக கே.எஸ்.அஸ்ரப் மற்றும் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி நோக்க உரையாற்றினார். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன் ஆற்றிய தொடக்க உரையில்:-
கல்லூரி மாணவர்கள் தாங்கள் பெற்ற கல்வி அறிவில் நான்கில் ஒரு பங்கை வேலை வாய்ப்புக்காக பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள மூன்று பங்கை சமூக சிந்தனை, பகுத்தறிவு மற்றும் அறிவியல் ஆய்வு போன்றவற்றுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்த பரிசளிப்பு விழாவில் வேலூர் மாவட்ட கழக தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட காப்பாளர் வி.சடகோபன் மற்றும் வேலூர் மாவட்ட கழக மகளிரணி தலைவர் ந.தேன்மொழி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட மருத்துவர் தி.ச.முகமது சயி கலைஞர் கண் மருத்துவ ஆராய்ச்சி மய்யம் வேலூர், அவர்கள் ஆற்றிய சிறப்புரையில் கூறியதாவது:-
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்தகாரணத்தால் . பகுத்தறிவுச் சுடர் விட்டு ஒளிர்கிறது. தமிழர்கள் தங்களது பெயருக்கு பின்னால் ஜாதிப் பெயரை பயன்படுத்துவது கிடையாது. பல்வேறு மதத்தினர் இங்கு சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த மண்ணில் சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு போன்ற கோட்பாட்டின் அடிப்படையில் திராவிட மாடல் அரசு இங்கு செயல்படுகிறது. இதற்குக் காரணம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வகுத்த திராவிட பாதையே காரணமாகும். எனவே மாணவர்கள் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சமூக பணி மற்றும் இட ஒதுக்கீடு போராட்டங்கள் குறித்து முழுமையாக படித்து பெரியாரைப் போற்ற வேண்டும் என்று கூறினார்.
பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள். விழா முடிவில் குடியேற்றம் நகர திராவிடர் கழக தலைவர் சி. சாந்தகுமார் நன்றி உரையாற்றினார்.