ஜம்மு – காஷ்மீர் தேர்தல் காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி உடன்பாடு

viduthalai
2 Min Read

சிறீநகர், ஆக.27– ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் செப்டம்பா் 18-ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தோ்தல் நடை பெறவுள்ளது. செப்டம்பா் 25, அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் 2-ஆவது, 3-ஆவது கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெறவுள்ளன. அக்டோபா் 4-ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு தோ்தல்: ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டில் கடைசியாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலுக்குப் பிந்தைய கூட்டணியை பாஜகவும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் (பிடிபி) முதல் முறையாக இணைந்து ஆட்சி அமைத்தன. முதலமைச்சராக இருந்த பிடிபி தலைவா் முஃப்தி முகமது சையத் 2016-இல் காலமானதையடுத்து, அவரது மகள் மெஹபூபா முஃப்தி முதலமைச்சரானார். 2018-இல் ஆதரவை பாஜக திரும்பப் பெற்றதால் ஆட்சிக் கவிழ்ந்து ஆளுநா் கட்டுப்பாட்டில் ஜம்மு-காஷ்மீா் நிர்வாகம் வந்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. இதில் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் சட்டப் பேரவையுடன் கூடியதாகும்.

அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், அங்கு மூன்று கட்ட பேரவைத் தோ்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, முக்கிய மாநிலக் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.

பேச்சில் உடன்பாடு: தொகுதிப் பங்கீடு தொடா்பாக சிறீநகரில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லாவின் இல்லத்தில் நேற்று (26.8.2024) மாலை இறுதிகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடா்ந்து, ஃபரூக் அப்துல்லா, காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் ஆகியோர் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனா். அப்போது, தொகுதிப் பங்கீடு விவரம் வெளி யிடப்பட்டது.

அதன்படி, 51 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சியும், 32 தொகுதிகளில் காங்கிரசும் போட்டி யிடவுள்ளன. இதர கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாந்தா்ஸ் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய இரண்டுமே போட்டியிடவுள்ளன.

‘நட்பு ரீதியிலான போட்டியாக இது இருக்கும்; கட்சிகள் களமிறங்கும் தொகுதிகளின் விவரம் பின்னா் அறிவிக்கப்படும்’ என்று இரு தலைவா்களும் தெரிவித்தனா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *