ஆளுநர் மூலமாக கருநாடக அரசுக்கு பிஜேபி தரும் தொல்லைகள் முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு

Viduthalai
1 Min Read

பெங்களூரு, ஆக.22 கருநாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மூலமாக காங்கிரஸ் அரசுக்கு பாஜக தொந்தரவு கொடுத்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
கருநாடக முதலமைச்சர் சித்தராமை யாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை மைசூரு மேம்பாட்டு கழகம் (எம்யுடிஏ) கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, இந்த நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அனுமதியளித்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் சித்தரா மையா கூறியதாவது: எனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்வில் இதுவரை எந்த முறைகேட்டிலும் நான் ஈடுபட்டதில்லை.

எனது பதவியை வைத்து எந்த ஊழலும் செய்ததில்லை. ஆனால் பாஜகவும், மஜதவும் சேர்ந்துகொண்டு எனக்குஎதிராக பழிவாங்கும் அரசியலில்ஈடுபட்டுள்ளனர். என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு: என் மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லாதபோதும் ஆளுநர் என் மீது வழக்குத் தொடர அனுமதி அளித்துள்ளார். அவரது இந்த முடிவின் பின்னணியில் பாஜக மேலிடத்தின் அழுத்தம் இருக்கிறது.
கருநாடக காங்கிரஸ் அரசுக்கு தொந்தரவு தர வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. என் மீது எந்த தவறும் இல்லாததால் நான் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக மாட்டேன். எனது பதவிக்காலம் முழுவதும் நானே முதலமைச்சராக தொடர்வேன். என் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *