மும்பை, ஆக. 20- மகாராட்டிரத்தில் துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவாருக்கு பாஜகவினா் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக கூட்டணிக் கட்சியான பாஜகவிடம் அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் விளக்கம் கேட்டுள்ளது.
288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராட்டிர சட்டப் பேரவைக்கான தோ்தல் அக்டோபா் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மாநிலத்தில் பாஜக – முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை – துணை முதலமைச்சா் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை பிரிவு, சரத் பவார் தலைமை யிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ளன.
அண்மையில் நடைபெற்ற மக்கள வைத் தோ்தலில் மகாராட்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் காங் கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் (பவார்)-சிவசேனை (உத்தவ்) கூட்டணி 30 இடங் களில் வென்றது. பாஜக கூட்டணி 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2019 மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி 23 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
மக்களவைத் தோ்தலைப் போல, பேரவைத் தோ்தலிலும் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப் புகள் உள்ளதாக கருதப்படுகிறது. மக்கள வைத் தோ்தலில் பாஜக கூட்டணி தோல்வியடைந்ததற்கு அஜீத் பவாரை கூட்டணியில் இணைத்ததுதான் காரணம் என்று பாஜகவில் ஒரு தரப் பினா் கருதுகின்றனா். அஜீத் பவாரை கூட்டணியில் சோ்த்தது தவறு என ஆா்எஸ்எஸ் அமைப்பும் விமா்சித்திருந்தது.
இந்நிலையில், புணேயில் 18.8.2024 அன்று ஜன சம்மான் யாத்திரையில் பங்கேற்ற அஜீத் பவார், அங்கு சுற்றுலாத் துறை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜகவைச் சோ்ந்த சிலா் அவருக்கு கருப்புக் கொடி காட்டினா்.
இது தொடா்பான காட்சிப் பதிவை ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டஅஜீத் பவார் கட்சியின் செய்தித்தொடா்பாளா் அமோல் மித்காரி , பாஜகவிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
அஜீத் பவாரை மீண்டும் கட்சியில் சோ்த்துக் கொள்ளப்போவதில்லை என்று சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துவிட்டது. அதே நேரத்தில் மக்களவைத் தோ்தலில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து தனது மனைவியை நிறுத்தியது தவறு என்று அஜீத் பவார் அண்மையில் பேசியிருந்தார்.
ஆனால், ‘தோ்தல் தோல்விக்குப் பிறகுதான் சகோதரியை (என்னைப்) பற்றி அவருக்கு நினைவு வருகிறது. தோ்தல் பிரச்சாரத்தில் அவா் பேசியதை மறந்துவிட்டாரா’ என்று சுப்ரியா சுலே கேள்வி எழுப்பினார்.
அஜீத் பவார், சரத் பவாரின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத் தக்கது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸை உடைத்து அவா் பாஜகவுடன் கைகோத்து துணை முதலமைச்சர் பதவியைப் பெற்றார்.