புதுடில்லி ஆக 19- ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றை காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு தகுதி ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி (என்சி) மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) ஆகியவை இணைந்து பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் அகமது மிர் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து குலாம் அகமது மிர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்சி மற்றும் பிடிபி கட்சிகள் முன்பு எடுத்த நிலையில் உறுதியாக இருக்க வேண்டும். தனிப்பட்ட விருப்பங்களை விட மாநிலம் முக்கியம் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். மக்களவைத் தேர்தலின் போது பாஜகவுக்கு எதிரான இண்டியா கூட்டணியில் ஒற்றுமை இல்லாததால்தான் போதிய வெற்றி கிடைக்கவில்லை. என்சி, பிடிபி கட்சிகளின் செயல்பாடுகளை காஷ்மீர் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர்.தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. அதேபோல் காஷ்மீர் தேர்தலிலும் அனைவரும் இணைந்து மெகா கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும்.
காஷ்மீர் கட்சிகள் இணைந்து ‘குப்கர்’ அறிவிப்பை வெளியிட்டன. அதை என்சி மற்றும் பிடிபி கட்சிகள் இப்போது செயல்படுத்த வேண்டும். காஷ்மீர் தேர்தலில் என்சி, பிடிபி, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்று எங்கள் கட்சி பலமாக நம்புகிறது. அதை ஏற்காமல் தனித்து போட்டியிடுவோம், தனித்து செயல்படுவோம் என்றால், அது அவர்கள் விருப்பம். ஆனால், மக்கள்தான் நீதிபதிகள்.
மக்களவைத் தேர்தலில் என்சி கட்சியும் பிடிபி கட்சியும் தனித்தனியாக போட்டியிட்டதை காஷ்மீர் மக்கள் விரும்பவில்லை. அதனால்தான் என்சி தலைவர் உமர் அப்துல்லாவும் பிடிபி தலைவர் மெகபூபா முப்தியும் மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தனர். அதேபோல் சட்டப்பேரவைத் தேர்தலிலும் நடைபெற அனுமதிக்கக் கூடாது. காஷ்மீரில் சிறு சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுடன் இணைந்து செயல்பட பாஜக தயாராகி வருகிறது. அப்படி நடந்தால் அது என்சி, பிடிபி கட்சிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இவ்வாறு குலாம் அகமது மிர் கூறினார்.