புதுடில்லி, ஆக.16- சுதந்திர நாள் விழாவில் பொது சிவில் சட்டம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சுதந்திர நாளையொட்டி டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர், “தற்போ துள்ள சிவில் சட்டம் உண்மை யில் ஒரு வகையில் ஒரு வகுப்பு வாத சிவில் சட்டம் என்று சொல்லுவேன். நான் கூறுவது காலத்தின் தேவை. நாட் டில் மதச்சார்பற்ற சிவில் சட்டம் தேவை. அப்போதுதான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும்” என்றார். பொது சிவில் சட்டம் குறித்துமோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் எக்ஸ் தளத் தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ள தாவது:-
உயிரியல்ரீதியாக பிறக்காத பிரதமரின் தீய எண்ணங்கள் மற்றும் வரலாற்றை இழிவுப்படுத்தும் திறனுக்கு எல்லையே இல்லை. அது இன்று செங்கோட்டையில் வெட்ட வெளிச்சமானது.
தற்போது வரை வகுப்புவாத சிவில் சட்டம் இருப்பதாக கூறுவது, 1950-களின் நடுப்பகுதியில் இந்து தனிநபர் சட்டங்களில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வந்த அம்பேத்கரை அவமதிக்கும் செயலாகும். அந்த சீர்திருத்தங்களை அப்போது ஆர். எஸ்.எஸ். மற்றும் ஜனசங்கம் கடுமையாக எதிர்த்தது.
-இவ்வாறு ஜெய்ராம்ரமேஷ் கூறியுள்ளார்.
இதேபோல் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலரும் பொது சிவில் சட்டம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.