புதுடில்லி, ஆக.16 டில்லி செங்கோட்டை யில் நடைபெற்ற 78 ஆவது சுதந்திர தின விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இடம் ஒதுக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது கேபினட் அமைச்சருக்கு நிகரானது என்பதால் வழக்கமான நெறிமுறையின்படி முதல் வரிசையில் இருக்கை வரிசை ஒதுக்கப்பட் டிருக்க வேண்டுிம். ஆனால், ராகுல் காந்திக்கு ஒலிம்பிக் வீரர்களுக்கு நடுவே கடைசியில் இருந்து 2 ஆவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பிரதமர் மோடி இன்று 11 ஆவது முறையாக 78 ஆவது சுதந்திர நாளைமுன்னிட்டு டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று (15.8.2024) முதன்முறையாக பங்கேற்றார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தல் மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரசு கட்சி 99 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. இதனால், காங்கிரசு கட்சியின் இளந்தலைவரான அமேதி தொகுதி மக்களவை உறுப்பினரான ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவரானார்.
மக்களவை எதிர்க்கட்சி தலை வர் பதவி என்பது ஒன்றிய அமைச்சர்களுக்கு உரிய மரியாதை மற்றும் சலுகைகளுடன் கூடிய மரியாதைக்குரிய பதவி. இதனால், அரசு விழாக்களில் எதிர்க்கட்சித் தலைவருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்படுவது வழக்கமான நடவடிக்கையாகும். அதுபோல கடந்த வாஜ்பேயி தலைமையிலான பாஜக ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சோனியா காந்திக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த முறை, எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்திக்கு பின்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முன்வரிசை இடங்களை ஒன்றிய அமைச்சர்கள்தான் ஆக்கிரமித்திருந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இடையே ராகுல்காந்திக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதாவது கடைசியில் இருந்து இரண்டாவது வரிசை ஒதுக்கப்பட்டிருந்தது. இது தான் தற்போது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ராகுல் காந்திக்கு ஏன் பின் இருக்கை ஒதுக்கப்பட்டது குறித்து, சுதந்திர நாள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பிரபல ஊடகமான ‘இந்தியா டுடே’ வெளி யிட்டுள்ள செய்தியில், முன்வரிசை யில் உள்ள இருக்கைகள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டதால், காங்கிரஸ் மக்களவை உறுப்பினரை கடைசி வரிசைக்கு மாற்ற வேண்டியிருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரசு பொதுச்செயலாளார் வேணுகோபால் கூறும் போது மோடி தேர்தல் தோல்வி யில் இருந்து இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. அவரது ஆணவம் அப்படியே உள்ளது. மக்கள் மேலும் சரியான பாடம் கற்றுக்கொடுப்பார்கள். என்று கூறினார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வர்களுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதால் என்று காரணம் கூறும் ஒன்றிய அரசு, அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் போன்ற பா.ஜ.க.வை சேர்ந்தவர்களுக்கு முன்வரிசையில் இடம் கொடுக்கப்பட்டு இருந்ததே!