குவாஹாட்டி, ஆக.15 ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து மத ரீதியான துன்புறுத்தல் காரணமாக 2014 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியா வந்த அந்த நாடுகளின் சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் சிஏஏ சட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2019 டிசம்பரில் நிறை வேற்றியது.
இந்த சட்டத்தின் கீழ் அசாமில் முதல் நபராக துலோன் தாஸ் (50) என்பருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1988-இல் வங்கதேசத்தின் சில்ஹெட் பகுதியில் இருந்து அசாமின் சில் சாருக்கு துலோன் தாஸ் குடும்பம் வந்தது. கடந்த 1988-இல் பல்வேறு தாக்குதல்களுக்கு பிறகு அவரது குடும்பம் அசாம் வந்தது. அசாமில் கடந்த 1996 முதல் தாஸுக்கு வாக்குரிமை உள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளன.
30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வசித்தபோதும் அவர் களால் என்ஆர்சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) நடைமுறைகள் மூலம் குடியுரிமை பெறமுடியவில்லை. இந்நிலையில் சில்சாரை சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர், “என்ஆர்சி கேட்டு விண்ணப்பிக்க வேண்டாம். சிஏஏ அமலுக்கு வரும் வரை காத்திருங்கள்” என்று துலோன் தாஸுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி தற்போது அவர் குடியுரிமை பெற்றுள்ளார்.
அசாமில் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை கேட்டு 8 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.