டாக்கா, ஆக. 11- வங்கதேசத்தில் நேற்று (10.8.2024) போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர். இதையடுத்து தலைமை நீதிபதி தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
வங்கதேசத்தில் சுதந்திர போராட் டத்தில் ஈடுபட்டவர்களின் வாரிசு களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் அளிக்க வேண்டும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்தது. இதையடுத்து இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட மேனாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறியதில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந் தனர். பிரதமரின் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகை யிட்டதால், ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். அவருடன் இடைக்கால அரசின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் 16 பேர் பதவியேற்றனர். இதில் இருவர் மாணவர் அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள். மாணவர்களும், பொதுமக்களும் வன்முறையை கைவிட வேண்டும் என இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் மேனாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் விசுவாசியாக கருதப்படும் வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒபய்துல் ஹாசன் (65) மற்றும் மூத்த நீதிபதிகள் தங்களது பதவியிலிருந்து விலக வேண்டும் என மாணவர் அமைப்பின் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இட ஒதுக்கீடு சதியில் இவர்களுக்கும் பங்கு உண்டு என அவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை நீதிபதி ஒபய்துல் ஹாசன் அழைப்பு விடுத்தார். இதை நீதித்துறை சதி என கூறிய போராட்டக்காரர்கள், மாணவர்கள் அமைப்பினர் உச்ச நீதிமன்ற வளாகத்தை முற்றுகையிடும்படி அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற வளாகம் முன்பு மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தி முழக்கமிட்டனர். இதையறிந்த தலைமை நீதிபதி ஒபய்துல் ஹாசன், ஆலோசனை கூட்டத்தை ஒத்திவைத்தார். மாணவர்கள் போராட்டம் நடத்தி நெருக்கடி கொடுத்ததால், தான் பதவி விலகுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒபய்துல் அறிவித்தார். வங்கதேச அதிபர் முகமது ஷகாபுதீனுடன் ஆலோசனை நடத்திய பின் பதவி விலகல் கடிதத்தை வழங்குவதாக தலைமை நீதிபதி ஒபய்துல் ஹாசன் கூறினார்.
வங்கி ஆளுநரும்
பதவி விலகல்
வங்கதேச வங்கி ஆளுர் அப்துர் ரூப் தலுக்தர், தனது பதவியிலிருந்து நேற்று (10.8.2024) விலகினார். ஆனால், அவரது பதவி மிக முக்கியமானது என்பதால், அவரது விலகல் ஏற்கப்படவில்லை என நிதி அமைச்சக ஆலோசகர் சலேகுதீன் அகமது தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு வங்கதேச வங்கியின் துணை ஆளுநர்களாக இருந்த நான்கு பேர் வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து விலக்கப்பட்டார்கள். அவர்கள் மீது வங்கிஅதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வங்கதேச வங்கியின் ஆளுநர் அப்துர் ரூப் தலுக்தர் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்ற பின்பும், பரபரப்பான சூழல் தொடர்ந்து நிலவுகிறது.