ஈரோடு, ஆக.10 கடந்த 6.08.2024 அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் – பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் தலைவர் கனிமொழி நடராசன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் கவிதா நந்தகோபால் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
‘‘நீட் தேர்வு – நீளும் தீட்டு’’ என்ற தலைப்பில் திராவி டர் கழக துணைப்பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார்.
அவரது உரையில், ‘‘தமிழ்நாட்டு மாணவர்கள் நன்கு கல்வி கற்று குறிப்பாக, ஆங்கிலம் கற்று பல்வேறு நாடுகளின் வரவேற்பைப் பெற்று உயர்ந்த நிலையில் உள்ளனர். இதற்குக் காரணம் தமிழ்நாட்டில் ஆண்ட திராவிட இயக்க ஆட்சிகள் – கல்வியை கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடையச் செய்தது -செய்து வருகிறது. இதனால் கல்வியும் – மருத்துவத் துறையும் சிறப்பாக வளர்ந்துள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றிய அரசு நீட் தேர்வை அமல்படுத்தி தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை தொடர்ந்து சிதைத்தும், வஞ்சித்தும் வருகிறது.
எனவேதான் தமிழ்நாட்டில் அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் நீளும் தீட்டான நீட்தேர்வை எதிர்க்கின்றன. மக்கள் விரோதக் கட்சியான பி.ஜே.பி மட்டும் நீட்-டை ஆதரிக்கிறது. கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களது தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து நீட் – தேர்வை ஒழிக்க உறுதியேற்போம் என்று தமது உரையில் குறிப்பிட்டார்.
அடுத்துச் சிறப்புரையாற்றிய தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகரும், மூத்த பத்திரிகை யாளருமான கோவி லெனின், ‘‘படிப்பின் ருசியை உணர வைத்த உணவுத் திட்டம்’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அவரது உரையில், திராவிட இயக்க முன்னோடி ஆட்சியான நீதிக்கட்சி ஆட்சியில் குறிப்பாக சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் முதன்முதலாக சர்பிட்டி தியாகராயர் மேயராக இருந்தபோது கொண்டு வந்தது முதல் தமிழ்நாட்டு முதலமைச்சரான பச்சைத் தமிழர் காமராஜர் 1954- இல் தொடர்ந்த மதிய உணவுத்திட்டம் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியில் சத்துணவாக மாற்றம் பெற்றது.
இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்து; இன்று நடைபெறும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் காலை உணவுத்திட்டம் என்ற சிறப்பான திட்டத்தால், ‘‘பள்ளி செல்லாக் குழந்தைகளே இல்லை’’ என்ற நிலையை உருவாக்குகிறது. சத்தான உணவு – ஒவ்வொரு நாளும் ருசியான விதவிதமான உணவுகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இவை எல்லாம் அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்கு வர வேண்டும்; கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும்; அவர்களது வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்ற மனித நேயத்துடன் உருவாக்கப்பட்ட திட்டம்’’ என்று தமது சிறப்புரையில் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் ஈரோடு மாநகர மேயர் நாகரத்தினம், மண்டலத் தலைவர்கள் பி.கே.பழனிச்சாமி, குறிஞ்சி தண்டபாணி, ப.சசிகுமார், மாநில தி.மு.க வழக்குரைஞரணி இணை செயலாளர் மா.சு.ராதாகிருஷ்ணன், பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு பெருந்துறை வழக்குரைஞர் திருமலை, மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கிய செயலாளர் இளைய கோபால், மாவட்ட அமைப்பாளர் நைல் ராஜா, கோபி வெ.குமணன், மாவட்ட இளைஞரணி தி.மு.க அமைப்பாளர் திருவாசகம், தகவல் தொழில்நுட்ட அணி அமைப்பாளர் இளங்கவி, திராவிடர் கழக பொதுக் குழு உறுப்பினர் கோ.பாலகிருட்டிணன், கோ. திருநாவுக்கரசு, பவானிஅசோக்குமார், கோபி மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் மு. சென்னியப்பன், நம்பியூர் சண்முகசுந்தரம், சண்முகம், சூரிய, ஈரோடு சட்டக்கல்லூரி மாணவர் கண்ணம்மா, தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த. சண்முகம் மற்றும் திரளான பொதுமக்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர்.
ஜப்பான் நாட்டில் பெரியாரியல் பணி செய்யும் கோபி கமலக்கண்ணனைப் பாராட்டி பயனாடை அணிவித்தார் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார். அடுத்த நாள் (7.8.2024) கலைஞரின் நினைவு நாள் முன்னிட்டு கலைஞர் படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நிறைவாக பொருளாளர் ஆனந்தலட்சுமி நன்றி கூற, கூட்டம் இனிதே நிறைவடைந்தது.