ஜெய்ப்பூர், ஆக.6 ராஜஸ்தானில் கர்ப்பிணிப் பெண்ணை நிர்வாணமாக்கி தெருவில் நடக்கவைத்த வழக்கில், ஓராண்டுக்கு பிறகு 17 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப் பளித்தது மாவட்ட நீதிமன்றம்.
ராஜஸ்தானின் நிக்லகோட்டா கிராமத்தில் கடந்தாண்டு (31.8.2023) ஏழுமாத கர்ப்பிணிப் பெண்ணை, அவரது கணவர் உள்பட 17 பேர், தெருவில் நிர்வாணமாக நடக்கவைத்து துன்புறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த நிகழ்வு தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதனை யடுத்து, அந்தப் பெண் காவல் நிலையத்திற்கு சென்று, தன்னைத் துன்புறுத்தியவர்கள் மீது புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், இந்த வழக்கை விசாரிக்க மாநில காவல்துறையால் அய்ந்து பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப் பட்டு, விசாரணை மேற்கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் தொடர்புடைய பெண்ணின் கணவர் உள்பட 14 ஆண்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி, இதே வழக்கில் தொடர்புடைய மூன்று பெண்களுக்கும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் சிறப்பு அரசு வழக்குரைஞர் மணீஷ் நாகர் தெரிவித்ததாவது, “இதே போன்ற கொடூரமான குற்றம் மணிப்பூரிலும் நடந்தது. இத்தகைய குற்றங்கள் பெண்களுக்கு உணர்ச்சிரீதியான காயங்களை ஏற்படுத்துகின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் அவசியம், அப்போதுதான் குற்றங்கள் குறையும். நாட்டில் பெண்கள் தெய்வங்களாக மதிக்கப்படுகின்றனர்; ஆனால், தற்போது பெண்கள் மீது வன்முறையும் அட்டூழியங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது’’ என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராஜஸ்தான் மேனாள் முதல மைச்சர் அசோக் கெலாட் ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் ஒரு அரசு வேலையை அறிவித் திருந்தார்.