பெங்களூரு, ஆக.6 கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக மைசூருவில் உள்ள விஜயநகரில் 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரத்தால் கருநாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிடத் தலைவர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் நேற்று (5.8.2024) பெங்களூரு வந்து, முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கே.சி. வேணுகோபால் கூறுகையில், “முதலமைச்சர் சித்தராமையா எந்தவித குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. அவரது நேர்மை குறித்து கர்நாடக மக்கள் அறிவார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் அவரை ஊழல்வாதியாக சித்தரிக்கமுயற்சிக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க ஆளுநரை பாஜக மேலிடம் தவறாகப் பயன்படுத்துகிறது. ஆளுநர் அனுப்பியுள்ள அழைப்பாணையை திரும்ப பெற வேண்டும். அவர் அரசியலமைப்பு சட்ட வரையறைக்கு உட் பட்டு செயல்பட வேண்டும். அவர் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படக்கூடாது” என்றார்.